அன்பில் அவன் பட காட்சி
அன்பில் அவன் பட காட்சி

அன்பில் அவன்- திரை விமர்சனம்

ஒருகட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ரேவதியின் பழைய பங்களாவை பெரும் போராட்டத்துக்குப் பிறகு வாங்குகிறார்கள்.
Published on: 
அன்பில் அவன்- திரை விமர்சனம்(3.5 / 5)
Summary

காதலுக்காக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பெண்… அவளது கனவை தனது கனவாக ஏற்றுக்கொண்டு போராடும் கணவன்… இந்த இருவரின் அன்பையும் போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘அன்பில் அவன்’ காதல் காவியம்.

கதை

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்துக்குப் பிறகு மலைப்பகுதியில் சொந்தமாக ஒரு ஹோம் ஸ்டே தொடங்கி, கணவனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் ப்ரீத்தி முகுந்தனின் கனவு.

அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக அசோக் செல்வனும் ப்ரீத்தி முகுந்தனும் தனியார் நிறுவனத்தில் இரவு பகலாக உழைக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ முடியாமல் கஷ்டப்பட்டாலும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை மட்டும் இருவரும் விடுவதில்லை.

ஒருகட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ரேவதியின் பழைய பங்களாவை பெரும் போராட்டத்துக்குப் பிறகு வாங்குகிறார்கள். தங்களது கனவு நனவாகிவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் தம்பதிக்கு அப்பகுதியில் எம்.எல்.ஏ.வாகவும், உள்ளூர் தாதாவாகவும் வலம் வரும் கதிர் பாலுவால் பிரச்சனை ஏற்படுகிறது.

அந்தப் பிரச்சனைகளை எதிர்கொண்டு, தாங்கள் கனவு கண்ட வாழ்க்கையை அசோக் செல்வனும் ப்ரீத்தி முகுந்தனும் அடைந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

‘மனைவியின் கனவை நிறைவேற்ற வேண்டும்’ என்ற எளிமையான, அழகான மையக்கருவை எடுத்துக்கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர். கார்த்திகேயன்.

“உலகிலேயே உனக்கு மிகவும் பிடித்தது யார்?”

“என் மனைவிதான்.”

“மனைவி மீது எவ்வளவு அன்பு?”

“ரொம்ப இருக்கு!”

என்று சொல்லும் அளவுக்கு தனது உலகமே மனைவிதான் என்ற உணர்வை அசோக் செல்வன் தனது கதாபாத்திரம் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக 70 அடி உயரத்திலிருந்து அசோக் செல்வன் நிஜமாகவே குதிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

காதலுக்காக பெற்றோரை விட்டு வந்து, தான் கனவு கண்ட வாழ்க்கைக்காக கணவனுடன் இணைந்து போராடும் பெண்ணாக ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் கதிர் பாலு, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக சாபுமோன் அப்துல் சமது, ராணியாக ரேவதி உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இசை- தொழில்நுட்ப குழு

கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. கௌதமின் ஒளிப்பதிவு மலைப்பகுதியின் அழகையும், அதே நேரத்தில் கதையில் வரும் பதற்றமான தருணங்களையும் ரசிக்க வைக்கிறது.

இறுதிக்காட்சியில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தாலும், அவற்றின் நீளத்தை சற்றுக் குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்திருக்கும்.

காதலுக்காக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பெண்… அவளது கனவை தனது கனவாக ஏற்றுக்கொண்டு போராடும் கணவன்… இந்த இருவரின் அன்பையும் போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘அன்பில் அவன்’ காதல் காவியம்.

X

Maalai Malar
www.maalaimalar.com