விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நான் தான் போட்டி: இமான் அண்ணாச்சி

விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் என்னால் போட்டிபோட முடியும் என்ற இமான் அண்ணாச்சி கூறியிருக்கிறார்.
விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நான் தான் போட்டி: இமான் அண்ணாச்சி
Published on

சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிப்பில் படமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார். இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். அப்பாடல் வரிகள்

“சாராய மண்டைய மண்டைய குண்டக்க மண்டக்க...’ இப்பாடலில் சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல்முறையாக நடனமாடியிருக்கிறார். அந்நடனத்தை பார்த்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இனிமேல் நடனப்புயல் பிரபுதேவாவும், ராகவா லாரன்சும் இமான் அண்ணாச்சியிடம் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். 

இதைபற்றி இமான் அவர்கள் கூறும்போது, ‘எனக்குள் இப்படி ஒரு நடனத்திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார். இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 

இப்பாடலுக்கு நடன பயிற்சி அளித்தவர் கும்கி, கயல், ஆர்யா-2, பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த நோபல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை பாலமுரளி பாலு ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com