முதல்-அமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்: 8 முறை ஒன்ஸ் மோர் கேட்ட ரசிகர்கள்!

ரசிகர்கள் இந்த அளவுக்குப் பயங்கரமாகக் கொண்டாடுவதற்கு ஒரே ஒரு காரணம் தான், அது ‘விஜய்’ என்ற மூன்றெழுத்து மந்திரம் தான்!
CM Vijay
Published on: 
Summary

தமிழ்நாடு முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட சிறப்பு காட்சியில், ரசிகர்கள் திரையரங்கையே அதிர வைக்கும் வகையில் கொண்டாடித் தீர்த்துள்ளனர்.

100 நாட்களைக் கடந்த 'ஜனநாயகன்'

கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘ஜனநாயகன்’.

இந்தப் படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்ததை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற கமலா தியேட்டரில் ரசிகர்களுக்காகச் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

8 முறை ஒளிபரப்பப்பட்ட 'முதல்-அமைச்சர்' டைட்டில் கார்டு

படத்தின் ஆரம்ப காட்சியில், திரையில் 'தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்' என்ற டைட்டில் கார்டு தோன்றிய போது, தியேட்டரே அதிரும் வண்ணம் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அந்த ஒற்றைக் காட்சியைப் பார்த்த உற்சாகத்தில், "மீண்டும் மீண்டும் இந்த காட்சியை ஒளிபரப்ப வேண்டும்" என்று ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் அதிரடியாகக் கோரிக்கை வைத்தனர்.

ரசிகர்களின் அசைக்க முடியாத அன்பிற்கும், நீண்ட நேரக்கோரிக்கைக்கும் இணங்க, அந்தத் குறிப்பிட்ட டைட்டில் கார்டு காட்சி மட்டும் 8 முறை திரையில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கப்பட்டது.

டிக்கெட்டுகள் சில நொடிகளில் காலி - தியேட்டர் உரிமையாளர் நெகிழ்ச்சி

இது குறித்து கமலா தியேட்டர் உரிமையாளர் விஷ்ணு கமல் மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், ‘ஜனநாயகன்’ படத்தின் 100-வது நாள் விழாவை நாங்கள் தியேட்டரில் திருவிழா போலக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். படம் ரிலீஸான முதல் நாள் முதல் காட்சிக்கு எப்படி டிக்கெட்டுகள் விற்றுத் தீருமோ, அதேபோல இந்த 100-வது நாள் சிறப்பு காட்சிக்கும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

முதலில் ஒரே ஒரு ஸ்பெஷல் ஷோ தான் பிளான் செய்தோம். ஆன்லைனில் புக்கிங் ஓபன் செய்த சில நொடிகளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ரசிகர்களின் ஆர்வம் குறையாததால் அடுத்தடுத்து காட்சிகளை ஓபன் செய்தோம். அப்படி மொத்தம் 4 காட்சிகளின் டிக்கெட்டுகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தன.

‘விஜய்’ என்ற மூன்றெழுத்து மந்திரம்

இந்தப் படம் ஏற்கனவே ஆன்லைனில் லீக் ஆகிவிட்டதால் தியேட்டரில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இருக்காது என்று சிலர் கூறினார்கள். ஆனால், இது 'வீக்' ஆன படம் கிடையாது என்பதை ரசிகர்கள் நிரூபித்து விட்டார்கள்.

விஜய் அண்ணா எப்பவுமே பாக்ஸ் ஆபீஸில் 'பீக்' தான்! தியேட்டரில் படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்குப் பயங்கரமாகக் கொண்டாடுவதற்கு ஒரே ஒரு காரணம் தான், அது ‘விஜய்’ என்ற மூன்றெழுத்து மந்திரம் தான்!" என்று விஷ்ணு கமல் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆன்லைனில் படம் கசிந்த நிலையிலும், தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ரசிகர்களின் பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

X