தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு விருதா? ஸ்டாலின் ஆதங்கம்

69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு விருதா? ஸ்டாலின் ஆதங்கம்
Published on

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில், சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படமாக 'தி காஷ்மீர் பைல்ஸ்' அறிவிக்கப்பட்டது. இது மக்கள் பலரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "69-வது தேசிய விருதில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!

மேலும், இரவின்நிழல் படத்தில் 'மாயவா சாயவா' பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின்சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com