

மலையாளத்தில் ‘ரோமான்சம்’, ‘ஆவேசம்’ ஆகிய பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் தமிழில் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘சீன்’ (Scene).
நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 24 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது படத்தின் OTT வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃப்ளிக்ஸ் ‘சீன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வத் தேதியை இன்னும் அறிவிக்காத போதிலும், அத்தளத்தில் இப்படம் "Coming on Friday' எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ திரைப்படம் 17-வது நாளுக்குப் பிறகு பிற மொழிப் படங்களின் வெளியீட்டால் வசூலில் சற்று மந்தநிலையைச் சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் 'சாக்னில்க்' (Sacnilk) தகவலின்படி, உலகளவில் இதுவரை சுமார் ரூ. 268 கோடி வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம், ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று படங்களில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் நடிகர் என்ற வரலாற்றுச் சாதனையை சூர்யா படைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான இன்பராஜ் (சூர்யா), தான் முன்பு விசாரித்த ‘பெர்ஃப்யூம் கில்லர்’ கொலை வழக்கை ஒத்த புதிய கொலை வழக்கு ஒன்றைத் துப்பு துலக்க மீண்டும் களமிறங்குவதே இப்படத்தின் கதையாகும்.
இதில் இன்பராஜுக்கு உதவும் கதாபாத்திரங்களில் அவரது பெற்றோராக ஆனந்த்ராஜ், அனுராதா ஸ்ரீதர் ஆகியோரும், மாயா என்ற கதாபாத்திரத்தில் நஸ்ரியா நசீமும் நடித்துள்ளனர்.
மலையாள இளம் நடிகர் நஸ்லென் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.
மேலும், சிறையில் இருக்கும் தொடர் கொலையாளியாக டோவினோ தாமஸ், காவல்துறை உயர் அதிகாரியாக லால், மாயாவின் தந்தையாக கஜராஜ் மற்றும் ராஜ் பிரியன், சுரேஷ் மதியழகன், சுடலை மணி, திலகவதி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. திராவிட் செல்வம் தமிழ் வசனங்களை எழுதியுள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவையும், அஜ்மல் சாபு படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட ‘சீன்’ திரைப்படம், வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி முதல் ஓ.டி.டி. ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகியுள்ளது.