

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், Sun Pictures தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விளம்பர நிகழ்ச்சியான ‘ஜெயிலர் 2 ’ பட நிகழ்ச்சி சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் எளிமை குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் போது இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்திடம், "இவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தும் எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், "நான் நடிகர் என்பதை விரும்புகிறேன். ஆனால், அதைவிட பேருந்து நடத்துநர் வேலையைத்தான் அதிகம் விரும்புகிறேன். அந்த ஐந்தாண்டு கால பணி அனுபவத்தை இப்போதும் நான் மிகவும் தவறவிடுகிறேன் " என்று உருக்கமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் இன்று ஒரு பெரிய நடிகராக, ஸ்டாராக உயர்ந்திருந்தாலும், 'நான் ஒரு கண்டக்டர்' என்பது எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. எனவே, ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்களை என்னோடு என்னால் பொருத்திக்கொள்ள முடிவதில்லை.
இப்போதும் என்னை ஒரு பேருந்து நடத்துநராகவே நினைத்துக்கொள்கிறேன். ஒரு பேருந்து நடத்துநர் உங்களைப் போன்ற பெரிய மனிதர்களிடம் எப்பொழுதும் தன்மையாகவும் பணிவாகவும்தானே நடந்துகொள்வார்! அதுதான் என் எளிமைக்குக் காரணம்" என்றார்.
தனது தற்போதைய வயது குறித்தும், தொடர்ந்து கதாநாயகனாக வலம் வருவது குறித்தும் பேசிய ரஜினி, "எனக்கு இப்போது 76 வயதாகிவிட்டது. இந்த வயதிலும் இன்னும் ஹீரோவாகவே நடிக்கிறீர்களே என்று பலரும் கேட்கிறார்கள்.
நான் இன்னும் கதாநாயகனாக நடிப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அது, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிகர்கள்தான்" என்று கூறி ரசிகர்களுக்குத் தன் நன்றியினைத் தெரிவித்தார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த எதார்த்தமான மற்றும் நெகிழ்ச்சியான பேச்சு அவரது எளிமையையும், ரசிகர்கள் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பையும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.