6 வருஷம் ஜெயில்ல இருந்தும் மராத்தி வரல!- அமைச்சர் கோரிக்கைக்குச் சஞ்சய் தத்தின் கலகலப்பான பதில்

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன.
Actor Sanjay Dutt
Published on
Summary

மும்பையில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் தொழிலைத் தொடர மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவை போக்குவரத்துத் துறை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

மும்பையில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று மராத்தி மொழியில் பேச மறுத்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தனது சிறை வாழ்க்கையைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகப் பதிலளித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தானே பகுதியில் நடைபெற்ற ‘சமஸ்கிருதி யுவா பிரதிஷ்டான்’ நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது மைக் பிடித்த அமைச்சர் பிரதாப் சர்நாயக், "தற்போது நான் அனைவருக்கும் மராத்தி மொழி கற்றுக்கொடுத்து வருகிறேன். சஞ்சய் தத் இந்தி மொழியில் பேசினாலும், நம் அனைவருக்கும் மராத்தி புரியும். எனவே அவரை இன்று மராத்தியில் பேச வைக்கலாம்" என்று அங்கு திரண்டிருந்த மக்களிடம் கூறினார்.

இதைக் கேட்ட சஞ்சய் தத், புன்னகையுடன் மைக்கை வாங்கி, "பிரதாப் பாய், நான் புனே ஏர்வாடா சிறையில் 6 ஆண்டுகள் இருந்தேன். அங்கே இவ்வளவு காலம் இருந்தும் கூட என்னால் மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை. மிகக் குறைந்த அளவே கற்றுக் கொண்டேன்" எனக் கூறி கூட்டத்தினரைச் சிரிக்க வைத்தார். தொடர்ந்து, "தும்ஹி சர்வ்நாம் நமஸ்கார்" (அனைவருக்கும் எனது வணக்கம்) என்று மராத்தியில் கூறி 'ஹர் ஹர் மகாதேவ்' என்ற முழக்கத்தையும் எழுப்பினார்.

25 ஆண்டுகால நட்பு

பின்னர் அமைச்சர் பிரதாப் சர்நாயக்கின் தோள் மீது கைபோட்டவாறு பேசிய சஞ்சய் தத், "பிரதாப் பாய் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய நட்பு இன்று நேற்று தொடங்கியது அல்ல; கடந்த 25 ஆண்டுகளாகத் தொடரும் மிகவும் பழமையான நட்பு" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மும்பையில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் தொழிலைத் தொடர மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவை போக்குவரத்துத் துறை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன் பின்னணியிலேயே அமைச்சர் பிரதாப் சர்நாயக் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன. அமைச்சரின் கோரிக்கையைச் சஞ்சய் தத் தனது பாணியில் நகைச்சுவையாகக் கடந்து சென்றதைச் சிலர் பாராட்டி வரும் வேளையில், மும்பையிலேயே இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் சஞ்சய் தத் மராத்தி பேசாதது குறித்துச் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com