ரோலக்ஸ் ஸ்பின்-ஆஃப் படம் உறுதி: லோகேஷ் கனகராஜுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக நடிகர் சூர்யா தகவல்!

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
  Actor Suriya-Lokesh Kanagaraj
Published on: 
Summary

இப்படத்தில் நாயகனாக நடிப்பீர்களா அல்லது வில்லனாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, தான் மீண்டும் எதிர்மறையான கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிட்) இடம்பெற்ற மிக முக்கியமான கதாபாத்திரமான 'ரோலக்ஸ்' குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தின் இறுதியில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து ரசிகர்களை மிரளச் செய்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கென தனித் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது சூர்யா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற தனது வரவிருக்கும் 'சீன்' படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, ரோலக்ஸ் தனிப் படம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், "இது தொடர்பாக பல வேலைகள் நடந்து வருகின்றன; தயவுசெய்து லோகியை என்னை அழைத்து பேசச் சொல்லுங்கள், விரைவில் நாம் இதை உருவாக்குவோம்" என்று உற்சாகத்துடன் கூறினார். ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வில்லனாக நடிக்க ஆர்வம்

இப்படத்தில் நாயகனாக நடிப்பீர்களா அல்லது வில்லனாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, தான் மீண்டும் எதிர்மறையான கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். "வில்லனாக நடிப்பதுதான் சிறந்தது, ஏற்கனவே திரையில் நிறைய நாயகர்களைப் பார்த்துவிட்டோம், ஒரு வில்லனாக நாம் இதைச் செய்வோம்" என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார். விக்ரம் படத்தில் அவரது மிரட்டலான வில்லன் தோற்றம் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது முழு நீள வில்லனாக அவர் களமிறங்குவது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

மறுபுறம், நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க, இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

X