

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில், தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகையாக வலம்வருபவர் ஸ்ரீலீலா தற்போது இப்படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்'பக்கத்தில் இந்த மாஸான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலீலாவை வரவேற்பது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், "SHE'S GOT THE SPARK, SHE'S GOT THE PATAKA" என்று குறிப்பிட்டு, பேரழகி ஸ்ரீலீலாவை 'தர்மன்' திரைப்படக் குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் எனப் பதிவிட்டுள்ளனர்.
அவரது அசாத்திய நடனம் மற்றும் துள்ளலான நடிப்புக்கு ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், ரஜினிகாந்துடன் அவர் கைகோர்த்திருப்பது படத்திற்குப் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரம்மாண்ட கூட்டணிகளுடன் தயாராகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு 'கெட்ட பையன் சார்' என்ற டேக்லைனும் பயன்படுத்தப்பட்டு வருவது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ரஜினிகாந்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியுள்ள அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஆக்ஷன் மாஸ்டர்களான அன்பறிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
கமல்ஹாசனின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த 'தர்மன்' திரைப்படம், அறிவிப்பு வெளியான நாள் முதலே இந்தியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.