

ஆஸ்கர் பட்டியலுக்கு முன்னதாக, அடுத்த ஆண்டுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பு ஆகிய இரு பிரிவுகளிலும் 'ராமாயணா' குறுகிய பட்டியலில் தேர்வாகி கவனம் ஈர்த்தது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவின் முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி', 'ட்யூன்: பார்ட் 3' , 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' , 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' , 'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்ட்' , ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 'டிஸ்க்ளோஷர் டே', 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' மற்றும் ஜப்பானின் 'காட்ஸில்லா மைனஸ் ஜீரோ' ஆகிய உலகப் புகழ்பெற்ற படங்களுடன் 'ராமாயணா' களமிறங்கியுள்ளது.
ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ள இந்தப் படத்தை நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் இணைந்து தயாரித்துள்ளனர்; சர்வதேச விநியோகத்தை சோனி பிக்சர்ஸ் மேற்கொண்டுள்ளது. பிரம்மாண்ட புராணக் கதையைத் திரையில் உயிர்ப்பிக்க எட்டு முறை ஆஸ்கர் வென்ற விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனமான டிஎன்இஜி மற்றும் ரீடிஃபைன் (ReDefine) ஆகியவை இணைந்து பணியாற்றியுள்ளன. விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக டான் கிளாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இந்த அங்கீகாரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
ஆஸ்கர் பட்டியலுக்கு முன்னதாக, அடுத்த ஆண்டுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பு ஆகிய இரு பிரிவுகளிலும் 'ராமாயணா' குறுகிய பட்டியலில் தேர்வாகி கவனம் ஈர்த்தது. இதற்கு முன்பு 95-வது ஆஸ்கர் போட்டியில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் 20 இடங்களுக்குள் வந்திருந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் 'ராமாயணா' இணைந்துள்ளது.
முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பது இறுதிப் பரிந்துரை அல்ல; இது தகுதிச் சுற்றின் தொடக்கப் படியே ஆகும். டிசம்பர் 7 முதல் 11 வரை நடைபெறும் ஆரம்பகட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு, டிசம்பர் 15 அன்று 10 படங்கள் கொண்ட குறுகிய பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 21 அன்று இறுதி 5 பரிந்துரைகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2027 ஆஸ்கர் விழா மார்ச் 14 அன்று நடைபெற உள்ளது.