

அண்மையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் போட்டியாளர் ஒருவர் குறித்து, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகருமான விஜய் சேதுபதி கூறிய கருத்து பெரும் விவாதங்களுக்கு உள்ளானது.
விவாதங்களுக்கு உள்ளாகும் அளவுக்கு விஜய் சேதுபதி தவறான கருத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் முதலமைச்சர் விஜய்யைத்தான் மறைமுகமாக சாடினார் என பலரும் தெரிவித்தனர். தவெக தொண்டர்களும் அதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டது.
இதனால் விஜய்சேதுபதியை காரணமே இல்லாமல் பலரும் விமர்சிக்க தொடங்கினர். மேலும் இதன் தாக்கம் பத்தா பட வசூலிலும் எதிரொலித்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பின்னர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், விஜய் குறித்து பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
நேர்காணலில், விஜய்யின் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்.,
“எனக்கு விஜய்யை ஒரு நடிகராகவே தெரியும். நான் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அரசியலைப் பொறுத்தவரை, அவர் அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், அவற்றை எவ்வாறு செயல்படுத்த உத்தேசித்துள்ளனர் என்பதைப் பற்றியதுதான் அது.
அதற்கு அப்பால், அரசியலை உன்னிப்பாகப் பின்தொடர்வதும், பகுப்பாய்வு செய்வதும் உண்மையில் என் வேலை அல்ல. எனக்கு வேறு வேலைகள் உள்ளன.” என தெரிவித்தார்.
உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு, “அரசியல் என்பது ஆசை அல்ல; அது சேவையைப் பற்றியது. இதை நான் பலமுறை கூறியுள்ளேன். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை மக்களுக்கு செய்கிறேன். அது போதும் என்று நினைக்கிறேன்.
நான் இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன். இலவச துணிக்கடை ஒன்று வைத்துள்ளேன். எங்கள் ஊரில் இப்போதுதான் குளம் ஒன்றை தூர்வாரி கொடுத்தேன். நிறைய பேரை படிக்க வைக்கிறேன். இதுவே அரசியல்தான். நான் சம்பாதிக்கிறேன்; எனது பணத்தில் மக்களுக்கு எதையோ செய்கிறேன்; இதில் திருப்தியாக இருக்கிறேன். இதுபோதும் எனக்கு.” என தெரிவித்தார்.
தொடர்ந்து, “அரசியல் கருத்து தெரிவிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை இங்கு யாருக்கும் கிடையாது. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி. மற்றொன்று கருத்து வைக்கும் அளவிற்கு நான் அதை கூர்ந்து கவனித்திருக்க வேண்டும்.
அதன்பிறகு நான் கூறும் கருத்து நான் நடிக்கும் படத்தை பாதிக்கக்கூடாது. ஆனால் இன்று சமூக வலைதளங்கள் அப்படி செயல்படுவதில்லை.” என நிசர்தனத்தைப் பேசினார்.