

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. பிரபலங்கள் கலந்துகொண்டு படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். நயன்தாராவின் அர்ப்பணிப்பு, யோகிபாபுவின் நகைச்சுவை பேச்சு, சுந்தர்.சியின் உழைப்பை புகழ்ந்த குஷ்புவின் உரை உள்ளிட்டவை விழாவை சிறப்பித்தன.
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்-2’. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது. அவினி சினிமேக்ஸ், ரவுடி பிக்சர்ஸ் ஐ.வி. எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஊர்வசி, யோகிபாபு, ரெஜினா கசான்ட்ரா, இனியா, துனியா விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது. விழாவில் பிரபலங்கள் பலர் பங்கேற்று படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தனர்.
விழாவில் குஷ்பு பேசும் போது, நான் பெற்றெடுத்தது 2 குழந்தை. ஆனால் தத்தெடுத்தது ஒரு குழந்தை. அதுதான் சுந்தர்.சி. அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே பிறந்தவர் நயன்தாரா. அவ்வளவு அர்ப்பணிப்போடு இருப்பார்கள். சுந்தர்.சி படம் என்றால் தியேட்டரில் மல்லிகைப்பூ வாசனை அடிக்கும். என்னைப் பொறுத்தவரை 32 வருடமாக ஒரு மனிதர். வெற்றி, தோல்வி, சந்தோசங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு ஒரு துளி கூட மாறாமல் வாழ முடியுமா? ரொம்ப பெருமையுடன் சொல்கிறேன். அது சுந்தர். சியால் மட்டுமே முடியும். வேலைன்னு வந்துட்டா யாரென்றே பார்க்க மாட்டார். மனைவி, குழந்தைகள், குடும்பம், அம்மாவை என யாரையும் பார்க்க மாட்டார். புரொடியூசருக்கு எப்படி லாபத்தை ஈட்டி தர முடியும் என்பதை மட்டும் நினைத்து தான் வேலை செய்வார். மூக்குத்தி அம்மன்-2 படத்தை பொறுத்தவரை ஐசரி கணேசுக்கு நன்றி.
ஊர்வசி ஒரு காட்சியில் நடிக்கிறார் என்றால் எல்லோருடைய பார்வையும் அவர் மேல்தான் இருக்கும். நான் நடிக்கும் போது பயந்து நடுங்கும் ஒரே நடிகை ஊர்வசி.
இவ்வாறு அவர் பேசினார்.
யோகிபாபு பேசும் போது, ‘சுந்தர்.சியிடம் நான் குழந்தை மாதிரி வந்தேன். இப்ப எனக்கு 3 குழந்தைகள் ஆகி விட்டது. இருக்கிறதில் பெரிய சொத்து குழந்தை சொத்துதான். அது கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். உலகத்தில் பலர் கஷ்டத்தில் இருக்கிறார்கள். சுந்தர்.சியுடன் எப்போதும் நான் இருப்பேன். இந்த படம் ரொம்ப பிளாக்பஷ்டர் ஆக வேண்டும்’ என பேசினார். தொடர்ந்து அவரிடம் தொகுப்பாளர், நீங்கள் அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர். முன்வரிசையில் உள்ளவர்களுக்காக கடவுளிடம் நீங்கள் வேண்டக்கூடிய விஷயம் என்னவாக இருக்கும்? இதற்கு பதிலளித்த யோகிபாபு, ‘பொங்கல் வைக்கவா சொல்ல முடியும். ஊர்வசி மூகாம்பிகை பக்தர். இருப்பதில் ‘பவர்புல்’ தெய்வம். அவர் தைரியமாக இருக்கலாம். அதனால் ஊர்வசி அக்கா நீங்கள் வருடத்திற்கு 2 முறை மூகாம்பிகை கோவிலுக்கு சென்று விட்டு வாருங்கள். (ஜோஷ்யர் ஆக்கிடுவீங்க போல). கடவுள் இருக்கிறார் என்று நம்பினீர்கள் என்றால் நீங்க எதையும் யாரிடமும் கேட்க வேண்டாம். அது தானாக நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுந்தர்.சி பேசும் போது, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கான தடைகள் நீங்க விரதம் இருந்து மாசாணி அம்மன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டவர் நயன்தாரா. அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.