"அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது" -நடிகை குஷ்பு!

நான் உடலை குறைத்ததிற்கும் ஊசி போட்டு குறைத்தேன் என்று பேசினார்கள் - எத்தனை பேர் எனக்குப் பணம் கொடுத்தார்கள்?
Khushbu - Katrina Kaif
Published on
Summary

பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைஃப், பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை கூடியதாகச் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களுக்கு, நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

சர்ச்சையின் பின்னணி என்ன?

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்து கொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பின், அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களை வைத்து, சமூக வலைத்தளங்களில் சிலர் அவரைப் 'பாடி ஷேமிங்' செய்து அநாகரிகமாக விமர்சித்து வந்தனர்.

இதற்குப் பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், நடிகை குஷ்பு கத்ரினாவுக்கு ஆதரவாகத் தனது குரலை உயர்த்தியுள்ளார்.

ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதியா? - குஷ்பு கேள்வி

பெண்களின் உடல் தோற்றம் மட்டுமே ஏன் எப்போதும் பொது விவாதப் பொருளாக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ள குஷ்பு, சமூகத்தின் இரட்டை நிலையைச் சாடியுள்ளார். "ஒரு ஆணுக்கு வழுக்கை விழுந்தால் அவர் 'கௌரவமானவர்' ஆகிறார்.

நரைமுடி வந்தால் 'முதிர்ச்சியானவர், வசீகரமானவர்' என்கிறார்கள். ஒரு ஆணின் இடுப்பு அளவு 40 அங்குலமாக மாறினால், அவரது தோற்றம் ஏன் இப்படி ஆனது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை.

ஆனால், ஒரு பெண்ணுக்கு வயதாகும் போது ஏற்படும் ஒவ்வொரு சிறு மாற்றமும் இங்கே பொது விவாதப் பொருளாக மாற்றப்படுகிறது.

குழந்தை பிறந்த பிறகும் ஒரு பெண் அதே பழைய உடல் தோற்றத்துடன்தான் இருக்க வேண்டும் என்று ஏன் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது?" என்று காட்டமாக சாடியுள்ளார்.

கத்ரினா எப்போதும் அழகானவர் தான்!

கத்ரினா கைஃபின் அழகைப் பாராட்டிய குஷ்பு, "கத்ரினா கைஃப் அன்று அழகாக இருந்தார், இன்று அழகாக இருக்கிறார், எப்போதும் அழகாகவே இருப்பார்.

அழகு என்பது காண்பவரின் கண்களில் தான் உள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

குஷ்பு -வின் கொந்தளிப்பு!

தன்னை விமர்சிப்பவர்களையும் இந்த பதிவின் மூலம் குஷ்பு வறுத்தெடுத்துள்ளார்: "நான் உடல் எடை அதிகமாக இருந்தபோது என்னை பயங்கரமாகக் கேலி செய்தார்கள்.

இப்போது கடுமையான முயற்சிக்குப் பிறகு நான் உடல் எடையைக் குறைத்தவுடன், நான் ஏதோ ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டுதான் எடையைக் குறைத்தேன் என்று பேசுகிறார்கள்.

நான் ஊசிகள் வாங்குவதற்காக இந்த சமூகத்தில் எத்தனை பேர் எனக்குப் பணம் கொடுத்தார்கள்?" என்று கோபமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களின் உடல் மீதான சமூகத்தின் தப்பான பார்வையை உடைக்கும் விதமாக அமைந்துள்ள குஷ்புவின் இந்த ஆவேசப் பதிவு, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com