ஜெயிலர் 2 டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு: மாஸ் போஸ்டருடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிரடி அப்டேட்!

ரஜினிகாந்த், துப்பாக்கியால் சுடும் வகையிலான மாஸான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
 Rajinikanth
Published on: 

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் உலகம் முழுவதும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், நேற்று ஒரு புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கதாநாயகன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்த், துப்பாக்கியால் சுடும் வகையிலான மாஸான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நாளை (அக்.5) இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் 15ம் தேதி அன்று படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த டிரெய்லர் அப்டேட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, சிவராஜ்குமார், விநாயகம் மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். மேலும், இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சாரமூடு, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மேகனா ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் புதிதாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ரஜினி படங்களிலேயே முதன்முறையாக 'ஜெயிலர் 2' பிரம்மாண்டமான ஐமேக்ஸ் திரையரங்க வடிவத்தில் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com