

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் சில முக்கியக் காட்சிகளை மீண்டும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் வெளியீட்டு தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வெளியாயின.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வந்த வதந்திகளுக்கு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்திரைப்படம் திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 15 அன்று ஆயுத பூஜை விடுமுறை விருந்தாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் சில முக்கியக் காட்சிகளை மீண்டும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் வெளியீட்டு தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வெளியாயின. இத்தகைய குழப்பங்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களும் பதிலைத் எதிர்பார்த்திருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அந்த வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புதிய போஸ்டரில் ரஜினிகாந்த் துப்பாக்கியுடன் பவர்ஃபுல்லான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அத்துடன் "அலப்பறை கிளப்புறோம்" என்ற மாஸ் டேக்லைனுடன் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி திரைப்படம் வெளியாவது உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அதே கூட்டணியில் உருவாகும் 'ஜெயிலர் 2' படத்தின் மீது சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு, ஜாஃபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து சுராஜ் வெஞ்சாரமூடு, பகவதி பெருமாள், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவையும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை விடுமுறையைக் குறிவைத்துத் தயாராகும் இத்திரைப்படம் தடையின்றி அக்டோபரில் வெளியாவது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.