கோவா திரைப்பட விழாவில் பெற்ற விருதை பாலஸ்தீனத்திற்கு அர்ப்பணித்த துருக்கி இயக்குநருக்கு இஸ்ரேல் கண்டனம்

ஆர்மீனிய இனப்படுகொலையை துருக்கி அங்கீகரிக்காததை இஸ்ரேல் சுட்டிக்காட்டியது.
பைசல் சோய்சல்
பைசல் சோய்சல்
Published on: 
Summary

கோவா திரைப்பட விழா விருதை பாலஸ்தீனியர்களுக்கு அர்ப்பணித்த துருக்கிய இயக்குநருக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நவம்பர் 20 தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

விருது

நேற்று நிறைவு விழாவில் தனது 'ரஹ்மா' திரைப்படத்திற்காக பெற்ற ICFT-UNESCO காந்தி பதக்கத்தை துருக்கிய இயக்குநர் பைசல் சோய்சல் பாலஸ்தீனத்திற்கு அர்ப்பணித்தார்.

கருத்தரிக்க இயலாமையால் அவதிப்படும், உர்பாவை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளரான மெரியம் மற்றும் ஒன்பது வயது சிரிய நாட்டு அனாதை சிறுமியான ரஹ்மா ஆகியோரின் உறவே இப்படத்தின் கருப்பொருள்.

இப்படம் அதன் மனிதாபிமான சித்தரிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக விருது பெற்றுள்ளது.

விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலையில், சோய்சலின் நண்பரும் ஒளிப்பதிவாளருமான எம்ரே பெக்காக்கர், அவர் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டு, சோய்சலின் செய்தியை வாசித்தார்.

பாலஸ்தீனத்திற்கு அர்ப்பணம்

தனது செய்தியில் சோய்சல், காசாவில் குழந்தைகள் பசியால் இறப்பதையும், குண்டுவீச்சுகளால் மருத்துவமனைகள் அழிக்கப்படுவதையும் உலகம் கண்டுவரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மௌனம் காக்கின்றனர் குற்றம்சாட்டினார்.

இந்த விருது, காசாவின் குழந்தைகள் உட்பட அனைத்து பாலஸ்தீனியர்களுக்கும் அர்ப்பணிப்பதாகவும், இது அங்கு இழந்த மனிதநேயத்தின் மறுபிறப்பைக் குறிப்பதாகவும் அவர் கூறினார்.

மகாத்மா காந்தியைப் போன்று இன்றைய தலைவர்கள் நீதி, சுதந்திரம் மற்றும் அமைதிக்காக மனிதகுலத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் கண்டனம்

இதற்கிடையில், இந்தியாவிற்கான இஸ்ரேலிய துணைத் தூதர் யனிவ் ரெவாச், சோய்சாலியின் உரைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார்.

விருது வழங்கும் விழாவைத் தனது சொந்த அரசியல் பிரசாரதிற்காக பயன்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.

ஆர்மீனிய இனப்படுகொலை

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், கருத்து வேறுபாடுகளையும் இஸ்ரேலை விமர்சிக்கும் உரிமையையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அவர், ஆர்மீனிய இனப்படுகொலையை துருக்கி அங்கீகரிக்காததையும், அரசியல் எதிர்ப்பு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இத்தகைய கருத்துக்கள் இந்தியா-இஸ்ரேல் உறவுகளில் பிளவுகளை உருவாக்கும் நோக்கம் கொண்டவை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

X