திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: படக்குழுவின் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட முக்கிய திரையரங்குகளில் ரசிகர்களுக்காக இந்த டிரெய்லர் திரையிடப்பட உள்ளது.
நடிகர் அஜித்
நடிகர் அஜித்
Published on
Summary

நடிகர் அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவண படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு 'அமராவதி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான 'அஜித்குமார் ரேசிங்' மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

ஆவணப்படம்

இதற்கிடையே, அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' (Gladiators - In Pursuit of Challenges) என்ற ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களான Asian Le Mans மற்றும் 24H Series போட்டிகளில் அஜித் பங்கேற்ற தருணங்கள் இதில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான 'ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது' அஜித்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் டிரெய்லர் வெளியீடு

'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் நாளை மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட முக்கிய திரையரங்குகளில் ரசிகர்களுக்காக இந்த டிரெய்லர் திரையிடப்பட உள்ளது. 3 நிமிடங்களுக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A 13 சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் கூட்டணி

இதற்கிடையே, 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு 'டேர்டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com