

பாலியல் வழக்கில் பிரபல தொழில் அதிபர் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
முக்கிய பிரமுகர்கள் போல் வேடமிடும் நேர்மையற்ற தனி நபர்களின் செயல்கள் எந்த அளவிற்கு செல்ல கூடும் என்பதை ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு வெளிப்படுத்தியுள்ளது. பண பலத்தால் மனம் தளராமல் இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்கள் நமது நன்றிக்கு உரியவர்கள். இந்த வழக்கில் கருணையற்ற நீதி வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை நீதியை நீண்ட கரங்கள் கருணை இன்றி தாக்க வேண்டும். இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்க கூடாது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில்,
“ஒரு குழந்தையின் வலியைப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிட முடியாது; அவளது குரலை அடக்கிவிடவும் முடியாது; நீதியை ஒருபோதும் பேரம் பேசித் தீர்மானிக்க முடியாது. அதேவேளையில், அதிகாரமிக்கவர்கள் தங்களைத் தண்டிக்கவே முடியாது என்று நினைக்கும் நிலையை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
குழந்தை மீதான பாலியல் வன்கொடுமையை விடக் கொடூரமான, கோழைத்தனமான மற்றும் மன்னிக்க முடியாத செயல் வேறெதுவும் இல்லை. குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படவோ, மவுனமாக்கப்படவோ அல்லது வேறொருவரின் வக்கிரமான செயல்களின் வடுக்களைச் சுமக்கவோ கட்டாயப்படுத்தப்படக் கூடாது. இது குறித்த எனது கோபம் முழுமையானது, உறுதியானது மற்றும் சமரசமற்றது. பாதிக்கப்பட்டவரை மவுனமாக்கவோ அல்லது நீதியைத் தடுக்கவோ செல்வாக்கு, அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் அல்லது பணம் (இவ்வழக்கில் 70 கோடி ரூபாய்) ஆகியவை பயன்படுத்தப்பட்டால், அது என் கோபத்தை மேலும் அதிகரிக்கிறது; அத்தகைய செயல் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ஆர்.வீரமணி வழக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படித் தண்டனையின்றி தப்பித்து வந்தார்? இது எவ்வளவு அவமானகரமானது!
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க வழியே இருக்கக்கூடாது. சட்டம் தனது முழு வலிமையுடன் செயல்பட்டு, குற்றவாளியையும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்களையும் தாமதமின்றித் தண்டிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.