72 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை.. தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் இருந்து குஜராத்துக்கு மாற்றம்

தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.
தேசிய திரைப்பட விருது விழா
தேசிய திரைப்பட விருது விழா
Published on

72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லிக்கு பதிலாக குஜராத்தில் நடைபெற உள்ளது.

இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய விருதாக மத்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள் இருக்கிறது.

இந்நிலையில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22 அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

டெல்லி டூ குஜராத்

1954-இல் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருது விழாக்கள், 72 ஆண்டு காலமாக தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.

தற்போது முதன்முறையாக இந்த மரபு உடைக்கப்பட்டு தலைநகருக்கு வெளியே குஜராத்தில் நடைபெறுகிறது.

1974 முதல் 2022 வரை திரைப்பட விழாக்கள் இயக்ககத்தால் (DFF) நடத்தப்பட்டு வந்த இந்த விழா, 2022 முதல் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

விருதுகள்

2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு இவ்வாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறந்த திரைப்படமாக 'ஆர்ட்டிகிள் 370' படம் இவ்வாண்டு விருதுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகையாக 'ஆர்ட்டிகிள் 370' படத்தில் நடித்ததற்காக யாமி கௌதம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

'பிரம்மயுகம்' படத்தில் நடித்த மம்முட்டி மற்றும் 'சந்து சேம்பியன்' படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு சிறந்த நடிகர் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

சிறந்த அறிமுக இயக்குநர் விருதுக்கு 'வீர் சவார்க்கர்' படத்தை இயக்கிய ரந்தீப் ஹூடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த ஜனரஞ்சகப் படமாக பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி தேர்வாகியுள்ளது.

தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புள்ள சிறந்த படம் என்ற பிரிவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' தேர்வாகியுள்ளது.

தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com