திரை இசை சங்கம் - மாயா பஜாருடன் 10 மாடி வணிக வளாகம் கட்ட திட்டம்!

டிசம்பரில் சென்னையில் பிரமாண்ட இசைவிழா நடக்க தமிழக அரசு அனுமதி வேண்டுகிறோம் - திரை இசை சங்கம்
Tamil Film Musicians Association
Published on: 
Summary

இந்தியாவின் முதல் திரையுலக சங்கம் என்ற பெருமைக்குரிய 'தமிழ் திரைப்பட இசை கலைஞர் சங்கம் மற்றும் ட்ரஸ்ட்' , தனது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பிரமாண்ட திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

பல ஆண்டு கனவுத் திட்டம்

திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் பல ஆண்டு காலக் கனவு, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடத்தை அமைப்பதாகும்.

அக்கட்டிடத்தின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு, நலிவடைந்த மற்றும் வாழ்வாதாரம் தேவைப்படும் தங்களது சங்க உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மாயா பஜார் ஹப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்த உன்னத நோக்கத்திற்காக, சங்கத்தின் தற்போதைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்து, கலைத்துறையில் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனமான 'மாயா பஜார் ஹப்' நிறுவனத்தை அணுகியுள்ளனர்.

அதன்படி, சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்குச் சொந்தமான இடத்தில், மாபெரும் நவீன வணிக வளாகம் ஒன்றை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

10 மாடி நவீன வணிக வளாகம்

இந்தத் திட்டத்தின் கீழ், திரையுலகப் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கிய 10 மாடி பிரமாண்ட கட்டிடம் கட்டப்படவுள்ளது.

நிதி திரட்ட உலகளாவிய இசை நிகழ்ச்சிகள்

இம்மாபெரும் கட்டிடக் கலைத் திட்டத்திற்கான நிதியைத் திரட்டும் பொருட்டு, திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் சென்னை, ஹைதராபாத், குஜராத், சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய முக்கிய உலக நகரங்களில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளன.

தமிழ்த்திரை இசையமைப்பாளர்களின் பெருந்தன்மை

தங்கள் சொந்த சங்கத்தின் இந்த உன்னத நோக்கத்திற்காக, தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் அனைத்து இசையமைப்பாளர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.

இத்திட்டம் முழுமை பெற, இந்த உலகளாவிய இசை நிகழ்ச்சிகளை எவ்வித கட்டணமும் இன்றி, முற்றிலும் இலவசமாக நடத்தித் தர அனைத்து இசையமைப்பாளர்களும் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுக்கு வேண்டுகோள்

இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளின் முதல் தொடக்க விழா, வரும் டிசம்பர் மாதம் சென்னையில் மிக விமர்சையாக நடக்கவிருக்கிறது. இதற்கான முறையான அனுமதியைப் பெறும் பொருட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அனுமதி கோர திரை இசை சங்கத்தினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி எவ்வித தடையுமின்றி மிகச் சிறப்பாக நடைபெற, தமிழக அரசு தகுந்த ஒத்துழைப்பையும் அனுமதியையும் வழங்க வேண்டும் என்று இப்பத்திரிகையாளர்கள் சந்திப்பின் வாயிலாக தமிழ்த்திரை இசை சங்கம் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறது.

இந்த நற்செய்தியைத் தமிழக அரசிடமும், பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்குமாறு பத்திரிகை, ஊடகம் மற்றும் தொலைக்காட்சி நண்பர்களைத் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com