தவறான தொடுதலாக இருந்திருந்தால் கண்டித்திருப்பேன்- ரசிகர் கன்னத்தை பிடித்து கிள்ளியது அன்பின் வெளிப்பாடு- ரச்சிதா ராம்

என் ரசிகர்கள் என் மீது வைத்திருந்த அன்பை தவறான நோக்கத்தில் வெளிப்படுத்தவில்லை.
Rachita Ram
Published on: 
Summary

ரச்சிதா ராம் இந்த விவகாரத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட போதிலும், இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

கன்னட திரை உலகில் பிரபல நடிகையான ரச்சிதா ராம் தனது 34-வது பிறந்தநாளை பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்கள் புடைசூழ திருவிழா போல் கொண்டாடினார். அப்போது, ​​ரச்சிதா ராம் ஒவ்வொரு ரசிகருக்கும் செல்பி எடுக்க வாய்ப்பளித்தார். அந்த நேரத்தில், ஒரு ரசிகர் அவரிடம் நெருங்கி வந்து செல்பி எடுத்தார். செல்பி எடுத்துவிட்டு திரும்பிச் செல்லும்போது, ​​அவர் ரச்சிதா ராமின் கன்னத்தை பிடித்து கிள்ளினார். அந்த நொடியில், ஒரு கணம் அதிர்ச்சியடைந்த ரச்சிதா ராம், இவர் யார் என்று யோசித்தவாறே லேசாக கோபமாக சிரித்துவிட்டு அமைதியானார்.

இதே போன்று மேலும் ஒரு ரசிகரும் நடிகையின் கன்னத்தை கிள்ள முயன்றார். இதனால் சுதாரித்து கொண்டு அந்த ரசிகரை தடுத்தார். கன்னத்தை கிள்ளிய ரசிகருக்கோ அப்படி ஒரு சந்தோசம். கிள்ளியதும் சிவந்த ரச்சிதாவின் கன்னத்தை பார்த்து அந்த முரட்டு ரசிகரின் இதயமோ ஆசை படத்தில் வரும் ‘உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது’ என்பதை போல் மகிழ்ச்சியில் துள்ளி இருக்கும். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பிறகு ரச்சிதாவின் ரசிகர்கள், "நம் சந்தனக்கல் ராணி கோபமாக இருக்கும்போதும் மிகவும் அழகாக இருக்கிறார்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரச்சிதாராம் பேட்டி

என் ரசிகர்கள் என் மீது வைத்திருந்த அன்பை தவறான நோக்கத்தில் வெளிப்படுத்தவில்லை. இதை பார்த்த என் நண்பர்கள், உனக்கு கோபம் வரவில்லையா? என்று கேட்டனர். ஒருவர் குழந்தையை கொஞ்சி அன்புடன் அரவணைப்பது போன்று தான் என் ரசிகரும் அன்பை வெளிப்படுத்தினார். அதில் எந்தவிதமான தவறான நோக்கமும் இல்லை. ஒருவேளை அதுதவறான தொடுதலாக இருந்திருந்தால், நிச்சயமாக நான் கண்டித்திருப்பேன். ஆனால், ஒருவர் தூய்மையான அன்பை வெளிப்படுத்தும்போது அதை நான் எப்படி கண்டிக்க முடியும்?. நான் அதை ஒரு பாராட்டுதலாக எடுத்துக் கொண்டேன். உண்மையில், அந்த அன்பை நான் மிகவும் ரசித்தேன்’ என்றார்.

ரச்சிதா ராம் இந்த விவகாரத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட போதிலும், இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஒரு தரப்பினர் ரசிகர்களின் அன்பை நடிகை புரிந்து கொண்ட விதம் பெருந்தன்மையானது என பாராட்டியுள்ளனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர், ரசிகராக இருப்பதற்காக எந்த ஒரு பொது பிரபலம் அல்லது பெண்ணின் அனுமதியின்றி அவரது உடலை தொடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சுட்டிக்காட்டி, பிரபலங்களின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கன்னட திரையுலகில் கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தர்ஷனின் புல்புல் என்ற படத்தின் மூலம் நடிகை ரச்சிதா ராம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் ரன்னா, ரத்தாவரா, பார்ஜரி, அயோக்யா, நடசர்வபெளமா, பாரதே, கிராந்தி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். தற்போது அவர் கிரிமினல், லில்லி, தாலி மற்றும் சபரி, செர்ச்சிங், பார் ராவணா உள்ளிட்ட பல படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com