பாடல் கட்டுப்பாடுகள் குறித்து இரட்டை நிலைப்பாடு: கோல்ட்ப்ளே பாடலுடன் ஒப்பிட்டு தில்ஜித் தோசாஞ்ச் கேள்வி

அகமதாபாத் நிகழ்ச்சியின் போது தன்னைச் சீண்டுபவர்களுக்கும் தில்ஜித் பதிலடி கொடுத்துள்ளார்.
 Diljit Dosanjh
Published on: 
Summary

'பட்டியாலா பெக்', 'பஞ்ச் தாரா', 'ஜே பிச்சோ ஃபீம் லப்பியா' மற்றும் 'ஜட் உத்தே ஃபயர் கார்டா' ஆகிய நான்கு பாடல்களின் வரிகள் மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பாடல்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாக இரட்டை நிலைப்பாடு நிலவுவதாகப் பிரபல பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் கேள்வி எழுப்பியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பேசிய அவர், மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதாகத் தனது பாடல்களுக்கு எதிர்ப்பு கிளம்புவதையும், சர்வதேச இசைக் கலைஞர்கள் இதுபோன்ற பாடல்களைப் பாடும்போது விமர்சனங்கள் எழாததையும் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு இதே மைதானத்தில் கோல்ட்ப்ளே இசைக்குழு நடத்திய நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த தில்ஜித், அக்குழுவின் 'ஹிம் ஃபார் தி வீக்கெண்ட்' பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

கோல்ட்ப்ளே பாடும்போது யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், தில்ஜித் பாடினால் மட்டும் பிரச்னையாகிறது என்றும் அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் பிறந்த தனக்கும், வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் உடன் வரும் தனது இந்தியக் குழுவினருக்கும் ஏன் இத்தகைய எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் அவர் வினவினார். கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் மீது தனக்கு எந்தத் தனிப்பட்ட பகையும் இல்லை என்றும், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி, வரி செலுத்தி, பஞ்சாபி மற்றும் இந்திய இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல விரும்புவதாகவும் தில்ஜித் தெரிவித்துள்ளார்.

ஆட்சேபனைக்குள்ளான பாடல்கள்

தில்ஜித்தின் அகமதாபாத் இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக, சண்டிகரில் உள்ள பிஜிஜிசி-46 கல்லூரியின் சமூகவியல் இணைப் பேராசிரியர் டாக்டர் தாரென்னாவர், நான்கு பாடல்களைப் பாட வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். 'பட்டியாலா பெக்', 'பஞ்ச் தாரா', 'ஜே பிச்சோ ஃபீம் லப்பியா' மற்றும் 'ஜட் உத்தே ஃபயர் கார்டா' ஆகிய நான்கு பாடல்களின் வரிகள் மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக இளம் பார்வையாளர்கள் முன்னிலையில் இத்தகைய பாடல்கள் பாடப்படும்போது, அவை குழந்தைகளிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் வாதிட்டிருந்தார்.

சீண்டல்களுக்கு தில்ஜித் எச்சரிக்கை

அகமதாபாத் நிகழ்ச்சியின் போது தன்னைச் சீண்டுபவர்களுக்கும் தில்ஜித் பதிலடி கொடுத்துள்ளார். தன்னை அதிகமாகச் சீண்டினால் தக்க பதிலடி கொடுப்பேன் என்றும், கோபப்படுத்தினால் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது முழு கவனமும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும், இந்திய இசையை உலகளவில் முன்னிறுத்துவதிலுமே உள்ளது என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பாட வேண்டும் என்ற தனது நீண்டகால ஆசையை நிறைவேற்றிய ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

X