அருண் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: இயக்குனர் முத்தையா இயக்கத்தில் பொங்கலுக்கு வரும் 'இருளன்'!

பொங்கல் பண்டிகைக்கு வருகிறது அருண் விஜய் நடித்த 'இருளன்' திரைப்படம்.
Irulan  - Arun Vijay
Published on: 
Summary

நடிகர் அருண் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘இருளன்’ திரைப்படத்தின் இரண்டு மிரட்டலான சிறப்பு போஸ்டர்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டரின் சிறப்பம்சங்கள்

வெளியாகியுள்ள இரண்டு போஸ்டர்களில் அருண் விஜய் இருவேறு மாறுபட்ட மற்றும் தீவிரமான தோற்றங்களில் காட்சியளிக்கிறார். குறிப்பாக, பிரிட்டிஷ் காலத்துப் பின்னணியில் ‘ராபர்ட் கிளப்’ முன்பாக, ஆங்கிலேய அதிகாரிகள் சூழ்ந்திருக்க, நீண்ட தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அருண் விஜய் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் தோற்றம் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

மேலும், போஸ்டரின் மேற்பகுதியில் “உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்” என்ற திருக்குறளும், கீழே “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இப்படம் வரலாற்றுப் பின்னணியும் வீரமும் நிறைந்த கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ ஆகிய கிராமப்புற அதிரடித் திரைப்படங்களை இயக்கிய முத்தையா, இப்படத்தை எழுதி இயக்குகிறார். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மிர்னா நடிக்க, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பையும், சக்தி சரவணன் சண்டைப் பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

தைத் திங்கள் வெளியீடு

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளைச் சுற்றிப் படமாக்கப்பட்டு வரும் இப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் எனப் போஸ்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்யின் இந்த மிரட்டலான தோற்ற மாற்றமும், பிரம்மாண்டப் பின்னணியும் ‘இருளன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

X