

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் சூர்யா, ரவி மோகன், இயக்குநர் மோகன் ராஜா, சுந்தர் சி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் சூர்யா சர்தார் டீசரை வெகுவாக பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, "சர்தார் 2 படத்தின் டிரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியும், உண்மையாக நடந்த சம்பவங்களை அடித்தளமாக எடுத்துக்கொண்டு உருவாகி இருக்கிறது. நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. அதை திரையில் சிறிதளவு தான் காண்பிக்க முடிகிறது.
ஒரு ஸ்பை திரில்லரை தமிழில் அண்மை காலத்தில் இவ்வளவு தத்துரூபமாக உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாக இவ்வளவு அழகியலுடன் நாம் பார்த்ததில்லை.
இயக்குநர் மித்ரன் ஒரு அற்புதமான எழுத்தாளர்- இயக்குநர்- இன்வெஸ்டிகேட்டட் ஜர்னலிசம் தெரிந்தவர் என நினைக்கிறேன். அவருடன் பேசும்போது, அவரிடம் ஏராளமான கதைகள் உள்ளதை தெரிந்து கொண்டேன்
ஒரு நடிகரை விட ஒரு கதாபாத்திரம் நிறைய பேசப்படுகிறது என்றால்.. அது ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். கார்த்தி சர்தாராக திரையில் தோன்ற முடிகிறது. நிற்க முடிகிறது.
எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள். இன்னும் ரசிகர்கள் அந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு திரைப்படத்தின் பார்ட் 2 உருவாகி இருக்கிறது என்றால்; அதை நடிகனுக்கு கிடைத்த ஒரு ஆசியாக பார்க்கிறேன்," என்றார்.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, 'நிழல்கள்' ரவி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலு குட்டி மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜீவன் கையாண்டிருக்கிறார். உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியல் பின்னணியை ஆக்சன் என்டர்டெய்னராக விவரிக்கும் இந்த திரைப்படம் - செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.