போலீஸ் நிலையங்களுக்கு முதலுதவி பெட்டி: வீடியோ காலில் இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சந்தானம்!

வீடியோ காலில் இன்ஸ்பெக்டரிடம் அன்போடு பேசிய சந்தானம் காவலர்களுக்கும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
Santhanam Fans Club
Published on: 
Summary

புதுச்சேரி காவல் துறையினரின் அவசர கால மருத்துவத் தேவைக்காக, நடிகர் சந்தானத்தின் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் போலீஸ் நிலையங்களுக்கு முதலுதவிப் பெட்டிகள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் முதலுதவிப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

போலீசாரை நெகிழ வைத்த வீடியோ கால்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர் மன்ற நிர்வாகியின் செல்போனுக்கு நடிகர் சந்தானம் வீடியோ காலில் தற்செயலாகத் தோன்றினார். காவல் நிலையத்தில் இருந்த போலீசார் அனைவரும் சந்தானத்தைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இரவு பகல் பாராமல் கடமையாற்றும் போலீசார்

லாஸ்பேட்டை காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) பாலமுருகனிடம் வீடியோ காலில் உற்சாகமாகப் பேசிய நடிகர் சந்தானம், "மக்களுக்காக நீங்கள்தான் சார் இரவு, பகல் பார்க்காமல் கஷ்டப்படுகிறீர்கள். அதனால்தான் எங்களது ரசிகர்கள் இந்த முதலுதவிப் பெட்டிகளைக் கொடுக்கிறார்கள்.

இதனை ஏற்பாடு செய்த ரசிகர்களுக்கும், ஓயாமல் கடமையாற்றும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது நிச்சயம் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்கிறேன்" என்று அன்போடு பேசினார்.

கலகலப்பான காவல் நிலையம்

இதைக் கேட்டு நெகிழ்ந்து போன இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சந்தானத்தின் இந்தச் சமூக சேவை மேலும் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது புதுச்சேரி காவல் நிலையத்தில் இருந்த மற்ற போலீசாரும், நடிகர் சந்தானம் பேசுவதை அறிந்து ஆர்வத்துடன் ஓடிவந்து செல்போன் வழியே அவருக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். இதனால் லாஸ்பேட்டை காவல் நிலையமே சில நிமிடங்கள் கலகலப்பாக மாறியது.

X