சக்திவாய்ந்த 200சிசி என்ஜினுடன் அறிமுகமானது யமஹாவின் YZF-R2

புதிய யமஹா YZF-R2 மாலின் டெலிவரி வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது.
Yamaha R2
Published on

யமஹா நிறுவனம் YZF-R2 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய யமஹா பைக்கின் விலை இந்தியாவில் ரூ. 2,30,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பைக் மூன்று வேரியண்ட்கள் மற்றும் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

புதிய YZF-R2 பைக்கில் 204சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.1bhp பவர் மற்றும் 19.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மிட்-ஸ்பெக் மற்றும் M வேரியன்ட்களில், பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.

ஹார்டுவேர் அம்சங்கள்:

யமஹா R15 உடன் ஒப்பிடும் போது, இந்த பைக் மிகவும் ஆக்ரோஷ வடிவமைப்பு மற்றும், கூர்மையான தோற்றம் கொண்ட ஹெட்லைட் பகுதியை கொண்டுள்ளது. இவை இந்த பைக்கிற்கு தனித்துவ தோற்றத்தை அளிக்கின்றன. இது டைமண்ட் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டு, இன்வெர்டட் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அமைப்பில் சஸ்பென்ஷன் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக் இரு முனைகளிலும் 17-இன்ச் அலாய் வீல்களில் இயங்குகிறது, மேலும் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் மூலம் பிரேக்கிங் செய்யப்படுகிறது. YZF-R2 M பைக்கில் கூடுதலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க், பின்புற ஷாக் அப்சார்பர், கிளட்ச் லீவர் மற்றும் பிரேக் லீவர் ஆகியவை உள்ளன.

யமஹா YZF-R2 சிறப்பு அம்சங்கள்:

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் கூடிய TFT கன்சோல் உள்ளது. டாப்-எண்ட் M வேரியண்ட்டில், கீலெஸ் இக்னிஷனுக்காக ஸ்மார்ட் கீ சிஸ்டம் வழங்கப்படுகிறது.

அனைத்து வேரியண்ட்களிலும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன், ஸ்ட்ரீட், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோட்களும் உள்ளன. இதன் மூலம், ஓட்டுநர் தனது விருப்பத்திற்கும் சாலை நிலைமைகளுக்கும் ஏற்ப பைக்கின் செயல்திறனை மாற்றியமைத்து கொள்ளலாம்.

இந்தியாவில் யமஹா R2 பைக் கே.டி.எம். ஆர்.சி.200 மற்றும் ஹீரோ கரிஸ்மா XMR 210 ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com