இன்றைய உலகில் அனைவரும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை வேலை, பணம், பொறுப்புகள், எதிர்காலத் திட்டங்கள் என நமது வாழ்க்கை பரபரப்பாக நகர்கிறது. இந்த ஓட்டத்தில் நமக்காகவும், நம் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க மறந்துவிடுகிறோம்.
சிறிய சந்தோஷங்களைக் கூட ரசிக்க நேரமில்லாமல் போய்விடுகிறது. மகிழ்ச்சி என்பது பெரிய சாதனைகளிலும், விலையுயர்ந்த பொருட்களிலும் மட்டும் இல்லை. குடும்பத்துடன் பேசும் சில நிமிடங்கள், நண்பர்களுடன் சிரிக்கும் தருணங்கள், இயற்கையை ரசிக்கும் பொழுதுகள் என சிறிய விஷயங்களில்தான் உண்மையான மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது.
அந்த வகையில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறோமா என மாலைமலர் சார்பில் சென்னையில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர்களில் 60 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 40 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் தெரிவித்தனர்.
இதே கேள்வியை மாலைமலர் யூடியூப் பக்கத்தில் கேட்ட போது 32 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 57 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் 11 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்தனர். மாலைமலர் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் கேட்டதற்கு 78 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் 22 சதவீதம் பேர் கருத்து இல்லை என்று தெரிவித்தனர்.
எக்ஸ் தளத்தில் கேட்டதில் 38 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 50 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் 12 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் பதிலளித்தனர்.