Vox Pop

தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு: சரி, சரியில்லை - பொதுமக்கள் கருத்து

இரவு நேர கட்டணம் சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர பகுதி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் கான்ட்ராக்ட் கேரேஜ் ஆட்டோ ரிக்சாகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அரசாணையின்படி புதிய கட்டணம் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 67-ன் கீழ் இதற்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பு 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு இந்த புதிய கட்டணம் அமலுக்கு வந்தது.

புதிய கட்டணம்:

அரசாணையின்படி, ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோ மீட்டராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காத்திருப்பு கட்டணம் 1 நிமிடத்திற்கு தலா ரூ. 1 என நிர்ணயம் செய்யப்பட்ட்டுள்ளது.

மலைப்பாதைகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 30 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேர கட்டணம் (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கருத்து கேட்பு:

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் மாலை மலர் சார்பில் கருத்து கேட்கப்பட்டது. மேலும், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது சரி என்று 9 பேரும், சரி இல்லை என்று 8 பேரும் கருத்து தெரிவித்தனர். பொது மக்களிடம் கேட்கப்பட்டதில் 53 சதவீதம் பேர் சரி என்றும், 47 சதவீதம் பேர் சரியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மாலைமலர் யூடியூபில் கேட்கப்பட்ட கேள்விக்கு 66 சதவீதம் பேர் சரி என்றும், 26 சதவீதம் பேர் சரியில்லை என்றும் 8 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்தனர்.

மாலைமலர் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு 65 சதவீதம் பேர் சரி என்றும், 27 சதவீதம் பேர் சரியில்லை என்றும் 8 சதவீதம் பேர் கருத்து இல்லை என தெரிவித்தனர். மாலைமலர் எக்ஸ் தளப் பக்கத்தில் 100 சதவீதம் பேர் கட்டண உயர்வு சரி தான் என்று பதிலளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT