தொழில்நுட்பம்

என்ன பெரிய சாட்ஜிபிடி.. 'IndianOil One' தெரியுமா? - குடும்பங்கள் கொண்டாடும் செயலி!

மாலை மலர்

ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

இந்தியாவில் அதிகம் பத்திரவிறக்கம் செய்யப்படும் செயலியாக ஓபன் ஏஐ உடைய சாட்ஜிபிடி செயலி முதலிடத்தில் இருந்து வந்தது.

அதிகரித்து வரும் ஏஐ பயன்பாடு, தொழில்கள் மற்றும் தனிப்பட்ட வாழக்கையிலும் ஏஐ சாட்பாட்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதால் மக்களும் அதற்கேற்றவாறு தகவமைந்து வருகின்றனர்.

ஆனால் என்னதான் டெக்னாலஜி என்று கூறிக்கொண்டாலும் அடுத்த வேலை உணவுக்கு என்று வந்துவிட்டால் எதுவும் எதிரே நிற்க முடியாது. மக்களின் சர்வைவல் இன்ஸ்டின்ட் அவற்றை சட்டை கூட செய்யாது.

அது தற்போது ஏஐ vs எல்பிஜி விஷயத்தில் நிரூபணமாகி உள்ளது.

சாட்ஜிபிடியை விட இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் IndianOil One செயலி அதிக எண்ணிக்கையிலான தரவிறக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்சார் டவர் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்திய அளவில் 'IndianOil One' செயலியை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்ட்டது. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு கூறி வந்தாலும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

IndianOil One செயலி மூலம் வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு, சிலிண்டர் டெலிவரியைக் கண்காணிப்பது மற்றும் புதிய இணைப்பிற்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை பெற முடியும்.

அதேபோல் பாரத் கேஸ் மற்றும் HP பயனர்களும் தங்களுக்குரிய செயலிகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.