ஆண்ட்ராய்டு 6.0க்கு குறைவான இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களில் இனி வாட்ஸ் அப் செயல்படாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டின் முந்தைய பதிப்புகளான ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும் போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை (உதாரணமாக AI வசதிகள்) வழங்க பழைய மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் போதுமானதாக இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயனர்களுக்கு ஏற்கனவே இதுதொடர்பாக எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு விட்டதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான உரையாடல்கள் மற்றும் மீடியா கோப்புகளை இழப்பதைத் தவிர்க்க, பயனர்கள் தங்கள் அரட்டைகளை பேக்கப் செய்துகொள்ளுமாறும் மெட்டா கூறியுள்ளது.
மெட்டாவின் இந்த அறிவிப்பால் ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்கு மேலான பதிப்பிற்கு மாற முடியாத பழைய போன் வைத்திருப்பவர்கள், வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த புதிய சாதனத்திற்கு மாற வேண்டியிருக்கும்.
இது வாட்ஸ்அப் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.