அறிந்து கொள்ளுங்கள்

வேகம் முக்கியமல்ல.. AI யுகத்தில் பணியில் நிலைத்திருப்பது எப்படி?.. ஸ்ரீதர் வேம்பு கொடுக்கும் சிம்பிள் அட்வைஸ்

வேகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், தங்கள் பணி வாடிக்கையாளருக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபரும் Zoho தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏஐ குறித்து தொடர்ந்து தன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சிறந்து விளங்குவது எப்படி என்பது குறித்து நம் மென்பொருள் பொறியாளர்களுக்கு நான் கூறுவது இதுதான். மிகச் சிறந்த துறைசார் நிபுணர்களாக இருங்கள்.

Programming திறன் அனைத்துக்கும் அடித்தளம் (அவற்றை நாம் இழக்க விரும்பவில்லை), ஆனால் ஆழ்ந்த துறைசார் அறிவு, நம்பகத்தன்மை, பாதுகாப்பு, ஆதரவு மற்றும் இணக்கம் ஆகியவற்றுக்காகத்தான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவால் இந்தப் பிரச்சினைகளை முழுமையாகக் கையாள முடியாது.

ஆரம்பகட்ட மென்பொருள் உருவாக்கச் செயல்முறையை செயற்கை நுண்ணறிவு கணிசமாக வேகப்படுத்தியுள்ளது.

மென்பொருளில் தேவையற்ற அல்லது தற்செயலான பல சிக்கல்கள் உள்ளன, அவற்றை செயற்கை நுண்ணறிவால் நீக்க முடியும்.

இருப்பினும், முழுமையாகச் செயல்படக்கூடிய மற்றும் நம்பகமான ஒரு தயாரிப்பை உருவாக்குவது இன்னமும் ஒரு கடினமான பணியே.

எனவே, டெவெலப்பர்கள் இந்த முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்தி, தங்கள் பணியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தங்கள் துறையில் ஆழ்ந்த புரிதல் கொண்ட பொறியாளர்கள் மட்டுமே நிலைத்து நிற்பார்கள்.

டெவலப்பர்கள் வேகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், தங்கள் பணி வாடிக்கையாளருக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.