அறிந்து கொள்ளுங்கள்

வாட்ஸ்அப் மெசேஜ்களை Schedule செய்யும் வசதி - விரைவில் அசத்தல் அப்டேட்

அதிகபட்சம் இரண்டு வாரங்கள் வரையிலும் ஷெட்யூல் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுடன் ஷெட்யூல் மெசேஜஸ் அம்சத்தைசோதித்து வருவதாகவும், வரும் வாரங்களில் இது மேலும் பல பயனர்களை சென்றடையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த அம்சம், பயனர்கள் செய்திகளை எழுதவும், இணைப்புகளை பகிரவும், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை உடனடியாக அனுப்ப வேண்டிய அவசியமின்றி, பின்னர் ஒரு நேரத்தில் அனுப்பவும் அனுமதிக்கும்.

அனுப்புபவரின் சாதனம் ஆஃப்லைனில் இருக்கும்போதும் கூட, இது தனிநபர் மற்றும் க்ரூப் சாட்கள் இரண்டிலும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பயனர்கள் ஷெட்யூல் மெசேஜஸ் அனுப்பப்படுவதற்கு முன்பு அவற்றை சரிபார்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்.

ஷெட்யூல் செய்வது எப்படி?

இதுகுறித்து WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.26.40.7-ஐ பயன்படுத்தும் சில பயனர்களுக்கு, ஷெட்யூல் மெசேஜ் அம்சத்தை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது . ஒரு மெசேஜை ஷெட்யூல் செய்ய, பயனர்கள் அதை சாட்-இல் டைப் செய்து, அனுப்பும் பொத்தானை அழுத்தி பிடிக்க வேண்டும். இந்த அம்சம் கிடைக்கும் பட்சத்தில், செய்தியை அனுப்புவதற்கான தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனை வாட்ஸ்அப் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அம்சம் குறுஞ்செய்திகள், இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆதரிப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் பயனர்கள் ஒரு நேரத்தில் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை மட்டுமே ஷெட்யூல் செய்ய முடியும். ஷெட்யூல் செய்வதற்கு முன்பு, அவர்கள் எடிட்டரில் ஒரு படத்தைத் திருத்தலாம் அல்லது அதற்கான தலைப்பை சேர்க்கலாம். மெசேஜ்களை குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் தொடங்கி அதிகபட்சம் இரண்டு வாரங்கள் வரையிலும் ஷெட்யூல் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

எப்படி இயங்கும், எப்போது கிடைக்கும்?

ஷெட்யூல் செய்யப்பட்ட நேரம் வந்தவுடன், செயலி மூடப்பட்டிருந்தாலும் அல்லது அனுப்புபவரின் ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் இருந்தாலும், வாட்ஸ்அப் தானாகவே செய்தியை அனுப்பும் என தெரிகிறது. இந்த அம்சம் க்ரூப் சாட்களிலும் செயல்படக்கூடும், ஆனால் செய்தி திட்டமிடப்பட்ட நேரத்தில் க்ரூப்-இல் இருந்த உறுப்பினர்கள் மட்டுமே அதை பெற முடியும். பின்னர் இணையும் எவரும் அந்த செய்தியைப் பெற மாட்டார்கள்.

ஷெட்யூல் மெசேஜ் அனுப்பப்படுவதற்கு முன்பு அவற்றை பார்ப்பதற்கும் நீக்குவதற்கும், பயனர்கள் சாட் இன்ஃபோ ஸ்கிரீனில் ஒரு பிரத்யேக பகுதியையும் பெறலாம். ஒரு பயனர் திட்டமிடப்பட்ட மெசேஜை நீக்கினால், அது குறித்த அறிவிப்பு பெறுநருக்குக் கிடைக்காது.

தெரிவிக்கப்பட்டுள்ள ஷெட்யூல் மெசேஜ் அம்சம், எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷனை ஆதரிக்க வாய்ப்புள்ளது. இந்த அம்சம், கூகுள் பிளே ஸ்டோர் வழியாக சில ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு வெளியிடப்பட்டு வருவதாகவும், வரும் வாரங்களில் இது பரவலாகக் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT