அறிந்து கொள்ளுங்கள்

டிராய் உத்தரவு எதிரொலி: குறைந்த விலையில் 4 புது ரீசார்ஜ்களை அறிமுகப்படுத்திய வோடபோன் ஐடியா

இது வி மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தாவையும் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் நான்கு புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை நான்கும் பயனர்களுக்கு வாய்ஸ் கால் சேவையை மட்டுமே வழங்குகின்றன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) சமீபத்திய உத்தரவுக்கு இணங்க, வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனமும் மூன்று புதிய வாய்ஸ் கால் சேவையை மட்டும் வழங்கும் பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாய்ஸ் கால் சேவையை மட்டும் வழங்கும் ரீசார்ஜ் பேக்குகள் ஒரே மாதிரியானவை. இந்த நான்கு ரீசார்ஜ் திட்டங்களும் அன்லிமிட்டெட் அழைப்புகளை வழங்குகின்றன. மிகவும் மலிவான ரீசார்ஜ் பேக் 25 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

ரீசார்ஜ் திட்டங்கள்:

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாய்ஸ்-ஒன்லி பிரிவில் மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ. 179 ஆகும். இது அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்களை 25 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும், இது வி மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தாவையும் வழங்குகிறது.

இதைத் தொடர்ந்து ரூ. 189 ரீசார்ஜ் திட்டம், வாடிக்கையாளர்களுக்கு அதே அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். ஒதுக்கீட்டு பலன்களை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ. 179 திட்டத்தை போலல்லாமல், இது வி மூவிஸ் மற்றும் டிவி செயலியை பயன்படுத்தும் வசதியை வழங்காது.

இவற்றுடன் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கக் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை ரூ. 203 விலையில் வழங்குகிறது. கடைசியாக இந்த பிரிவில் மிகவும் விலை உயர்ந்த ரிசார்ஜ் திட்டம் ரூ. 206 விலையில் கிடைக்கிறது. இது 1 மாத கால வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

டிராய் உத்தரவு:

கட்டணங்களைக் குறைப்பதற்காக, இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குரல் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளுக்கு பிரத்தியேகமாக சிறப்பு கட்டண வவுச்சர்களை வழங்க வேண்டும் என செப்டம்பர் 21 தேதியிட்ட தனது அறிவிப்பில் டிராய் உத்தரவிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு இது வந்துள்ளது.

இந்த உத்தரவின்படி, சிறப்பு கட்டண வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஒரு மாதத்தில் புதுப்பிப்பதற்கான தேதி கிடைக்கவில்லை என்றால், "அந்த மாதத்தின் கடைசி தேதியே புதுப்பிக்கப்படும் தேதியாக இருக்கும்".

"குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோர், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் அல்லது ஃபீச்சர் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு, ரீசார்ஜ் தொகைகள் அவர்களின் நிதிநிலைக்கு சுமையாக இருக்காத வகையில், குறுகிய கால சிறப்பு கட்டண வவுச்சர்கள் தேவைப்படுகின்றன" என்று டிராய் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT