ட்ரூ காலர் பயனர்கள் தினமும் 140 தொடர் எண்களிலிருந்து 4 லட்சம் அழைப்புகளையும், 1600 தொடர் எண்களிலிருந்து 1.25 லட்சம் அழைப்புகளையும் தீவிரமாகத் தடுத்து வருகின்றனர்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI-யின் உத்தரவை மீறி, ஸ்பேமர்கள் 1600 மற்றும் 140-இல் தொடங்கும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மக்களைக் குறிவைப்பதாக ட்ரூகாலர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து ட்ரூகாலர் தலைமை நிர்வாக அதிகாரி ரிஷித் ஜுன்ஜுன்வாலா தனது வலைதள பதிவில், “1600 மற்றும் 140 தொடர் அழைப்புகளை யாராலும் ஸ்பேம் எனக் குறிக்க முடியாது என்று டிராய் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுதான் அந்தத் தொடர்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகளின் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது.
ஸ்பேம் அனுப்புபவர்கள் இந்த உத்தரவைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தரவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.
தினமும் 5.25 லட்சம் பேர் இது ஸ்பேம் என்று எங்களிடம் சொல்லும்போது, இந்தத் தொடர்களில் இருந்து வரும் எண்களை ஸ்பேம் எனக் குறிக்க எங்களை ஏன் அனுமதிக்க கூடாது.
தற்போது, ட்ரூகாலர் பயனர்கள் தினமும் 140 தொடர் எண்களிலிருந்து 4 லட்சம் அழைப்புகளையும், 1600 தொடர் எண்களிலிருந்து 1.25 லட்சம் அழைப்புகளையும் தீவிரமாகத் தடுக்கின்றனர்.
மேலும், 140/1600 எண் தொடர்கள் மூலம் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தினமும் 5.1 கோடிக்கும் அதிகமான அழைப்புகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போகின்றன.
குறிப்பாக, சேவை மற்றும் பரிவர்த்தனை தொடர்பான அழைப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட 1600 தொடர் எண்களைப் பொறுத்தவரை, அக்டோபர் 2025 முதல் தினசரி முடக்கும் நடவடிக்கைகள் மும்மடங்காக அதிகரித்துள்ளன.
கடந்த 8 மாதங்களில் இந்தத் தொடர் எண்களுக்கு எதிராக மொத்தம் 7.4 கோடி மேனுவலாக(manual) தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்று ஜுன்ஜுன்வாலா தெரிவித்தார்.