அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான மிசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழக (MIT) ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த 2 ஆய்வறிக்கைகளை அண்மையில் வெளியிட்டனர்.
அவை ஏஐ குறித்த கவலைகளை மேலும் அதிகரிப்பதாக உள்ளன.
அறிக்கை 1 :
நாம் பயன்படுத்தும் ChatGPT, Gemini போன்ற ஏஐ-கள் எப்போதும் நம் கருத்தை ஆமோதிப்பது போல பதிலளிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
ஆராய்ச்சியாளர்கள் இதை Sycophancy என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் முகஸ்துதி செய்தல்.
MIT ஆராய்ச்சியாளர்கள் செய்த முதல் ஆய்வில் தெரியவருவதாவது,
ஒரு பயனர் ஒரு கருத்தைச் சொன்னால், ஏஐ அதைச் சரி என்று பாராட்டி வழிமொழிகிறது. இதனால் அந்தப் பயனர் தனது தவறான கருத்தையும் மிகச்சரியானது என்று நம்பத் தொடங்குகிறார்.
தொடக்கத்தில் நடுநிலையாக இருக்கும் ஒரு பயனர், ஏஐ-யின் தொடர் ஆமோதிப்பால் இறுதியில் ஒரு தவறான கருத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவராக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஏஐ-கள் பயனர்களுக்குப் பிடிக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவியாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
எனவே பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப பதிலளிக்கும் போது அவற்றுக்கு வெகுமதி கிடைப்பதால், அவை பயனரைத் திருத்துவதற்குப் பதிலாக அவர்களைத் திருப்திப்படுத்த முயல்கின்றன.
அறிக்கை 2
இது ஒரு புறம் இருக்க மற்றொரு ஆய்வு இதைவிட ஆபாத்தான ஒன்றை சுட்டிக்காட்டுகின்றன.
அதாவது, ஏஐ மிக எளிதாக பதில்களைக் கொடுப்பதால், மனிதர்கள் தாங்களாகவே தேடிப் பார்க்கும் அல்லது மற்றவர்களுடன் விவாதிக்கும் பழக்கத்தைக் கைவிடுகின்றனர்.
பொதுவாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதன் மூலமே அறிவு வளரும். ஆனால், ஏஐயிடம் மட்டுமே பதில்களை எதிர்பார்ப்பது இந்தச் சங்கிலியை உடைத்துவிடும்.
எதிர்காலத்தில் ஏஐ துல்லியமான பதில்களைத் தந்தாலும், அதைச் சிந்தித்துப் பார்க்கும் அல்லது கேள்வி கேட்கும் மனிதனின் பொது அறிவு மழுங்கிப்போகும் ஆபத்து உள்ளது.
இது மனிதர்களை கற்காலத்திற்கு இட்டுச் செல்லும் அபாயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதே ஆய்வாளர்களின் அச்சமாக உள்ளது.