ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் நுழைவதைத் 'சில பெரும் பணக்காரர்கள்' தடுப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
எலான் மஸ்க் உடைய தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவில் தன் சேவைகளை வழங்க வெகு காலமாக முயன்று வருகிறது.
ஆனால் மத்திய அரசு தரப்பில் இறுதி முடிவை பெறும் நடைமுறைகளை நிறைவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில்தான் எலான் மஸ்க் அவருக்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு கருத்துக்கு பதிலளிக்கையில் மறைமுகமாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
எஸ்சில் ஒரு பயனர், இந்தியாவில் ஏராளமான கிராமங்களில் இன்னும் பிராட்பேண்ட் இணைப்பு இல்லாததால் இங்கு ஸ்டார்லிங்க் தேவைப்படுகிறது என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மஸ்க், "துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சில பெரும் பணக்காரர்கள் எங்களைத் தடுக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை நீங்கள் யூகிக்கலாம்... இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்!" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு எக்ஸ் சேனலில் பேசிய அவர் "இந்தியாவில் ஸ்டார்லிங்க், தற்போதைய விலைகளைச் செலுத்த முடியாதவர்களுக்கும் அல்லது இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கும் அதிவேகமான, மலிவு விலை இணைய இணைப்பை வழங்கும்" என தெரிவித்திருந்தார்.
ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 20 கேட்வே தளங்களை அமைத்துள்ளதுடன், இந்தியப் பயனர்களின் தரவுகளை நாட்டிற்குள்ளேயே வைத்திருக்க இந்தியாவிற்கான பிரத்யேக பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது என்று ஸ்டார்லிங்க் வணிகச் செயல்பாடுகளின் துணைத் தலைவர் லாரன் டிரேயர், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை நிலவினாலும் அனைத்து ஒப்புதல்களும் கிடைத்தவுடன் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை நிச்சயம் தொடங்க முடியும் ஸ்டார்லிங்க் நிறுவனம் நம்புவதாக டிரையர் கூறினார்.
மேலும் பேசிய அவர், "ஸ்டார்லிங்க் செயல்படும் நாடுகளில் உள்ளதைப் போன்ற ஒரு உறவுமுறைக்கு, பல ஆண்டுகளாக நாங்கள் இந்தியாவிலும் அடித்தளம் அமைத்து வருகிறோம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, மாநில அரசுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி, ஸ்டார்லிங்கிற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் அது எவ்வாறு சிறப்பாகச் சேவை செய்ய முடியும் என்பதை ஆயிராய்ந்து வருகிறோம்.
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசு மற்றும் தொழில்துறையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், கடினமானதாக இருக்கும் இடங்களை சென்றடைய ஸ்டார்லிங்கால் உதவ முடியும்.
இறுதி ஒப்புதல்களைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், எங்கள் செய்தி எளிமையானது: இந்தியா தயாரானவுடன், இந்தியாவிற்குச் சேவை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் தொலைக்காட்சியில் கூறினார்.