குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வியுற்றதாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் 375 மில்லியன் டாலர் (ரூ.3,100 கோடி) அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவின் சாண்டா பே நீதிமன்றத்தில் கடந்த 6 வாரங்களாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, மெட்டா நிறுவனம் தனது செயலிகளை குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற முறையில் வடிவமைத்ததோடு, பாலியல் சுரண்டல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது, லாபத்திற்காக குழந்தைகளின் பாதுகாப்பை நிறுவனம் அடமானம் வைத்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.
மேலும் விசாரணையில், மெட்டாவின் முன்னாள் ஊழியர்கள் உட்பட 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. நூற்றுக்கணக்கான உள்நாட்டு ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன.
விசாரணை முடிவில், அரசுத் தரப்பில் 2.2 பில்லியன் அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் தளங்களில் தவறான உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்க கடுமையாக உழைத்து வருவதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.