அறிந்து கொள்ளுங்கள்

முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் தனது பணியாளர்களில் 6 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்ய முடிவு

விலை உயர்வுகள் மூலம் இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் லாபம் அதிகரித்துள்ளது.

ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ், பரந்த அளவிலான "நிறுவன மாற்றங்களை" மேற்கொள்வதால், தனது பணியாளர்களில் சுமார் 6 சதவீதத்தினரை, அதாவது கிட்டத்தட்ட 1000 பணியிடங்களை, பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இணை தலைமை செயல் அதிகாரிகள் கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சரண்டோஸ் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் இந்த பணிநீக்கங்களை அறிவித்தனர். நிறுவனத்தின் தயாரிப்பு, தொழில்நுட்பம், சட்டம் மற்றும் மனிதவள குழுக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்:

"இதுபோன்ற முடிவுகள் ஒருபோதும் எளிதானவை அல்ல, நாங்கள் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை," என்று பீட்டர்ஸ் மற்றும் சரண்டோஸ் அந்தக் குறிப்பில் எழுதியிருந்தனர். இந்தக் குறிப்பு அசோசியேட்டட் பிரஸ்ஸால் பெறப்பட்டது.

வணிகம் வலுவாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டாலும், எதிர்கால வளர்ச்சி மற்றும் "எங்கள் சேவையை மேம்படுத்துவதற்கான அதிக தாக்கமுள்ள பகுதிகளில்" முதலீடு செய்யும்போது, "எங்கள் ஊழியர்களுக்கும் வளங்களுக்கும் எங்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்பதில் நாங்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்" என்று நெட்ஃபிலிக்ஸ் கூறியது.

வருவாய் வளர்ச்சி:

உறுப்பினர் சேர்க்கைகள் மற்றும் விலை உயர்வுகள் மூலம், இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் லாபம் அதிகரித்துள்ளது. அதன் இரண்டாவது நிதி காலாண்டில், நிறுவனம் 3.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டியது. மேலும் 12.56 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை பெற்றது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட முறையே 9 சதவீதம் மற்றும் 13 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும், மூன்றாவது காலாண்டிற்கான நெட்ஃபிலிக்ஸின் கணிப்பு வால் ஸ்ட்ரீட்டின் எதிர்பார்ப்புகளுக்கு குறைவாகவே இருந்தது. நிறுவனம் அடுத்த வாரம் அந்த வருவாய் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதிகரிக்கும் போட்டி:

ஒட்டுமொத்தமாக, ஸ்ட்ரீமிங் துறையில் போட்டி மிகவும் கடுமையாகி வருகிறது. நெட்ஃபிலிக்ஸ் தொடர்ந்து ஒரு ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உள்ளது. ஆனால் அமேசானின் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ போன்ற போட்டியாளர்கள் அதற்கு மிக நெருக்கமாக பின்தொடர்கின்றனர்.

பாரமவுண்ட் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை 81 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது கடந்த வாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, HBO Max மற்றும் பாரமவுண்ட்+ ஆகியவையும் இப்போது ஸ்கைடான்ஸ் என்ற ஒரே நிறுவனத்தின் கீழ் வந்துள்ளன.

இந்த புதிய ஹாலிவுட் பெருநிறுவனம், தனது ஸ்ட்ரீமிங் சேவைகளை "காலப்போக்கில் ஒரே சேவையாக" ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. வார்னரின் ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் வணிகத்தை வாங்குவதற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. ஆனால், பிப்ரவரி மாதத்தில் அந்த முயற்சியை கைவிட்டது.

SCROLL FOR NEXT