அறிந்து கொள்ளுங்கள்

ஸ்மார்ட்போன் தரச்சான்று பெற ஸ்கிரீன் ப்ரொடெக்டர்கள் கட்டாயம்: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட ஸ்கிரீன் ப்ரொடெக்டர்கள் ஆகிய இரண்டிற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

இந்தியாவில் ஏப்ரல் 1, 2027 முதல் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்களை (Screen Protector) கட்டாய தர நிர்ணயங்களின் கீழ் கொண்டுவரவுள்ளது.

அதன்படி, உற்பத்தியாளர்களும் இறக்குமதியாளர்களும் தங்கள் தயாரிப்புகளை இந்திய தர நிர்ணய அமைப்பில் (BIS) பதிவு செய்ய வேண்டும்.

ரூ.2,000 கோடி ஈட்ட வாய்ப்பு:

தொழில்துறை மதிப்பீடுகளின்படி, இந்த ஒழுங்குமுறை மாற்றம் உள்நாட்டு ஸ்கிரீன் ப்ரொடெக்டர் தொழில்துறைக்கு ரூ.12,000-16,000 கோடி மதிப்பிலான வாய்ப்பை உருவாக்க உதவுவதோடு, ஜி.எஸ்.டி. வருவாயாக சுமார் ரூ.2,000 கோடியை ஈட்டவும் வாய்ப்புள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), வெளியிட்ட ஓர் அறிவிப்பின் மூலம், 2021-ஆம் ஆண்டின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் (கட்டாயப் பதிவுத் தேவை) ஆணையின் கீழ் வரும் பொருட்களின் பட்டியலில் “ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்கிரீன் ப்ரொடெக்டர்களை” சேர்த்துள்ளது.

இரண்டிற்கும் விதிமுறை பொருந்தும்:

தயாரிப்புகள், “கண்ணாடி ஸ்கிரீன் ப்ரொடெக்டர் — விவரக்குறிப்பு” எனப் பெயரிடப்பட்ட இந்தியத் தரநிலை IS 19348:2025-க்கு இணங்க வேண்டும். இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்கிரீன் ப்ரொடெக்டர்கள் ஆகிய இரண்டிற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கட்டாய பதிவு கட்டமைப்பின் கீழ், இந்த உத்தரவின் கீழ் வரும் பொருட்களை, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்யாமலும், தேவையான BIS பதிவை பெறாமலும் உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ முடியாது.

கட்டாய BIS தரநிலை:

இந்த நடவடிக்கை, பெருமளவில் சிதறிக் கிடக்கும் சந்தையில் மேம்பட்ட தர கட்டுப்பாட்டை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் (ICEA) மேற்கோள் காட்டிய தொழில்துறை மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்கள் நுகரப்படுகின்றன, மேலும் தற்போதைய விநியோகத்தில் 90%-க்கும் அதிகமானவை இறக்குமதி மூலமே வருகின்றன.

தரப்படுத்தல், தரம் குறைந்த தயாரிப்புகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு விநியோக சங்கிலியை மேலும் முறைப்படுத்த ஊக்குவிக்கவும் உதவும் என்று வாதிட்டு, பதப்படுத்தப்பட்ட கண்ணாடி ஸ்கிரீன் ப்ரொடெக்டர்களுக்கு கட்டாய BIS தரநிலைகளை ICEA முன்பு வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT