அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் மீண்டும் ஜியோ பிரைம் திட்டத்தை கொண்டுவந்த ரிலையன்ஸ் ஜியோ

அதே விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும் பணம் செலுத்தவும் முடியும்.

ஜியோ பிரைம் திட்டம் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்தது. இந்த திட்டம், ஜியோ சந்தாதாரர்களுக்கு விலை உறுதித்தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு திட்டங்களின் விலையை ஓராண்டுக்கு நிர்ணயித்துக்கொள்ள முடியும்.

எனவே, ஜியோ தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தினால், பயனர்கள் தங்களின் தற்போதைய திட்டத்தை பழைய விலையிலேயே வாங்க முடியும். விலை நிர்ணயத்தைத் தவிர, ஜியோ பிரைம் சந்தா மற்ற பலன்களையும் வழங்குகிறது.

பிரைம் சந்தாதார்களுக்கு முன்னுரிமை ஆதரவையும், புதிய ஜியோ தயாரிப்புகளை முன்கூட்டியே அணுகும் வாய்ப்பையும் நிறுவனம் உறுதியளிக்கிறது. பிரைம் உறுப்பினர்கள் கூடுதல் கேஷ்பேக் சலுகைகளையும் பெற முடியும்.

ஜியோ பிரைம் நன்மைகள்:

வாடிக்கையாளர்கள் ரூ. 300 ஒருமுறை செலுத்தி ஜியோ பிரைம் சந்தாவை பெறலாம். தற்போதுள்ள அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த பிரைம் சந்தா கிடைக்கிறது.

தற்போது வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் வாடிக்கையாளர்களாக இருக்கும் பயனர்கள், ஜியோ பிரைம் உறுப்பினராக ஆவதற்கு ஜியோவிற்கு மாறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நன்மைகளில், ஜியோ பிரைம் விலை உறுதித்தன்மை, கேஷ்பேக் மற்றும் பிற பிரத்யேக பலன்களை வழங்குகிறது.

ஜியோ பிரைம் திட்டம், வாடிக்கையாளரின் தற்போதைய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை, செப்டம்பர் 5, 2027 வரை, ஒரு வருடத்திற்கு நிலையாக வைத்திருக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

கேஷ்பேக் வவுச்சர்:

எதிர்கால விலை உயர்வுகள் மற்றும் பிற மாற்றங்களை பொருட்படுத்தாமல், சந்தாதாரர்கள் தாங்கள் முன்பு செலுத்திய அதே விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும் பணம் செலுத்தவும் முடியும்.

இது தவிர, பிரைம் சந்தா ரூ. 300 மதிப்புள்ள கேஷ்பேக் வவுச்சரை வழங்கும், இதை ஒரு புதிய ஜியோஹோம் அல்லது ஜியோபிசி இணைப்புக்கு பணம் செலுத்தும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்காக ஒரு புதிய ஜியோ சிம் இணைப்பை சேர்ப்பதன் மூலம், ஜியோ பிரைம் சந்தா ரூ. 300 மதிப்புள்ள மற்றொரு கேஷ்பேக் வவுச்சரை வழங்கும்.

ஜியோ நிறுவனம், பிரைம் சந்தாதாரர்களுக்கு புதிய ஜியோ தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சோதனைகளுக்கான முன்கூட்டிய அணுகலையும் வழங்கும், இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக அவற்றை சோதித்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.