ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் விலையை குறைந்தபட்சம் ரூ. 20,000-இல் தொடங்கி அதிகபட்சம் ரூ. 30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஐபோன் 17 ப்ரோ மாடல் ரூ. 1,34,999 என்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ரூ. 1,49,900 விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்க சந்தையில் புதிய ஐபோன்களின் விலை 200 டாலர்கள் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விலை உயர்வை தவிர்த்து புதிய ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் அதிநவீன கேமரா அமைப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோனில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் வேரியபில் அபெர்ச்சர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அமைப்பு குறைந்த வெளிச்சமுள்ள ஷாட்களில் எவ்வளவு வெளிச்சத்தை அனுமதிக்க முடியும் என்பதை சென்சார் கட்டுப்படுத்தும். இவ்வாறு செய்யும் போது பேக்கிரவுண்ட் பிளர் அதிக இயற்கையாக இருக்கும். இது புகைப்படங்களை இயற்கையிலேயே அதிக தெளிவாக காட்சியளிக்க செய்கிறது.
இதுதவிர புதிய ஐபோன் சீரிஸ் ஏ20 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது TSMC-இன் 2 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப்செட் அதீத செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இது ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த C2 மோடெம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மோடெம் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி மற்றும் செயற்கைக்கோள் சார்ந்த 5ஜி அம்சங்களை வழங்கும்.
புதிய ஐபோன்களின் பேட்டரி திறன் முந்தைய மாடல்களை விட மேம்பட்டு இருக்கும் என்றும், ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடலில் அதிகபட்சமாக 5200mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது. கொடுக்கும் விலைக்கு புதிய ஐபோன் சீரிஸ் மேம்பட்ட செயல்திறன், நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் அதிநவீன கேமரா அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 ஐபோன் சீரிஸ் டார்க் செர்ரி ரெட், லைட் புளூ மற்றும் டார்க் கிரே என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்கிரீன் அளவுகளை பொருத்தவரை ப்ரோ மாடல் 6.3 இன்ச் ஆகவும் ப்ரோ மேக்ஸ் மாடல் 6.9 இன்ச் ஆகவும் இருக்கும் என்றும் மேம்பட்ட LTPO+ பேனல்கள் முந்தைய மாடல்களை விட அதி பிரைட்னஸ் வழங்கும் என்று கூறப்படுகிறது.
பெரிய பேட்டரி என்பதால் ப்ரோ மேக்ஸ் மாடல் சற்றே தடிமனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஐபோனின் டைனமிக் ஐலேண்ட் முந்தைய மாடலில் இருப்பதை விட 35% வரை சிறியதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 12-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த முறை ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன்களுடன் ஐபோன் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை மட்டும் செப்டம்பரில் அறிமுகம் செய்வதாகவும், ஐபோன் 18 ஸ்டான்டர்டு மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.