விண்வெளியில் இருந்து பூமிக்கு டன் கணக்கில் தரவுகளை அனுப்பி, அதை பூமியில் உள்ள கணினிகள் மூலம் பகுப்பாய்வு செய்யும் வழக்கமான நடைமுறைக்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த டேக்மீடூஸ்பேஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்தியாவின் முதல் ஆர்பிட்டல் கம்ப்யூட்டிங் (விண்வெளி கணினிப் பயன்பாடு) செயற்கைக்கோளான 'MOI-1A' ஐ இன்று விண்ணில் செலுத்துகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வான்கார்ட் விண்வெளி தளத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் 'டிரான்ஸ்போர்ட்டர்-18' ரைட்ஷேர் மிஷன் மூலம் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட உள்ளது.
வழக்கமாக, செயற்கைக்கோள்கள் பூமியின் காடுகள், விவசாய நிலங்கள், கடலில் செல்லும் கப்பல்கள் போன்றவற்றை ஆயிரக்கணக்கான புகைப்படங்களாக எடுத்து பூமிக்கு அனுப்பும்.
பூமியில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்கள் தான் அதை ஆராய்ந்து தகவல்களைத் தரும். இந்த முறைக்கு அதிக நேரமும், பெரும் இணைய அலைவரிசையும் தேவைப்படுகிறது.
ஆனால், MOI-1A செயற்கைக்கோள் என்பது விண்வெளியில் இயங்கும் ஒரு சிறிய கம்ப்யூட்டர் ஆகும். இது 50 கிலோவிற்கும் குறைவான எடையைக் கொண்டது. இதில் அதிநவீன என்விடியா ஓரின் என்எக்ஸ் எட்ஜ்-கம்ப்யூட்டிங் பிராசஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எளிமையாகச் சொன்னால், உங்கள் போனில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் யாருக்கோ அனுப்பி நல்ல படங்களைத் தேர்வு செய்யச் சொல்வதற்கும், உங்கள் போனே சிறந்த படங்களைத் தானாகத் தேர்வு செய்வதற்கும் உள்ள வித்தியாசம்தான் இது. இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் இருந்தபடியே புகைப்படங்களை ஆராய்ந்து, முக்கியமான மற்றும் தேவையான தகவல்களை மட்டுமே பூமிக்கு அனுப்பும்.
விவசாயம், சுரங்கத் தொழில், சப்ளை செயின் மேலாண்மை மற்றும் காப்பீடு போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23 வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட தரவுகளை மட்டும் ஆராய, தங்களின் சொந்த AI மாடல்களை இந்தச் செயற்கைக்கோளில் விண்வெளியிலேயே பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
இதற்கு முன்னதாக, டிசம்பர் 2024-ல் இஸ்ரோவின் PSLV-C60 ராக்கெட் மூலம் 'MOI-TD' என்ற சோதனைச் செயற்கைக்கோளை இந்நிறுவனம் அனுப்பியிருந்தது.
அதில் 20-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டாலும், மென்பொருள் பிழை காரணமாக அதன் முதன்மை நோக்கங்களான புகைப்படம் எடுத்தல் மற்றும் AI பகுப்பாய்வு ஆகியவற்றைச் சாதிக்க முடியவில்லை.
அந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தற்போது முழுமையான கம்ப்யூட்டிங் செயற்கைக்கோளாக இந்த MOI-1A உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் நிலவும் கடுமையான கதிர்வீச்சு, தீவிர வெப்பம் மற்றும் குறைந்த மின்சாரம் ஆகிய சவால்களுக்கு மத்தியில், ஒரு கம்ப்யூட்டரால் நம்பகத்தன்மையுடன் AI பணிகளைச் செய்ய முடியுமா என்ற வினாவிற்கு இந்த MOI-1A விடை சொல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் விண்வெளியிலேயே ஒரு பெரிய 'தரவு மையத்தை'உருவாக்குவதே தங்களின் இறுதி இலக்கு என டேக்மீடூஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.