கூகுள் நிறுவனம் தனது முதன்மை செயற்கை நுண்ணறிவு உதவியாளராக ஜெமினிக்கு மாற உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 4 முதல் ஆன்ட்ராய்டு சாதனங்களில், கூகுள் அசிஸ்டன்ட்டை படிப்படியாக நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் ஒரு சாதனத்தில் அறிமுகம் செய்யப்படவுடன், பயனர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு தொலைபேசி, டேப்லட் அல்லது இணைக்கப்பட்ட சாதனங்களில் கூகுள் அசிஸ்டன்ட்டை பயன்படுத்தவோ அல்லது அதற்கு மீண்டும் மாறவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் வெளியிட்ட அறிவிப்பில், “செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் கூகுள் அசிஸ்டன்ட்டிற்கான அணுகலை நாங்கள் நீக்க தொடங்குவோம்.
இந்த செயல்முறை அனைவரையும் சென்றடைய சில வாரங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கிறோம். அணுகல் நீக்கப்பட்டவுடன், பயனர்கள் தங்கள் தொலைபேசி, டேப்லெட் அல்லது இணைக்கப்பட்ட சாதனங்களில் கூகுள் அசிஸ்டன்ட்டை இனிமேல் பயன்படுத்தவோ அல்லது மீண்டும் அதை தொடரவோ முடியாது” என்று தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மூலம் ஆன்ட்ராய்டு ஆட்டோவை பயன்படுத்தும் wear OS ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் வாகனங்களிலும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் மேலும் கூறுகையில், “கடந்த ஆண்டு முதலே லட்சக்கணக்கான பயனர்கள் அசிஸ்டன்டில் இருந்து ஜெமினிக்கு மாற தொடங்கினர்.
குறிப்பாக கடந்த ஆண்டில் ஜெமினி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தனர். இதையடுத்து இரண்டாவது காலாண்டில், ஜெமினி செயலி 950 மில்லியன் மாதாந்திர பயனாளர்களை எட்டியது.
மேலும் கூகுள் ஜெமினி செயலி, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 450 மில்லியனை விட இரண்டு மடங்கு பயனர்களை பெற்று அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இதன் தினசரி பயன்பாடு மூன்று மடங்காக அதிகரித்து காணப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
தற்போது இந்த புதிய மாற்றம் நடைபெற்று வருவதால், கூகுள் பாட்காஸ்ட்ஸ், ஹேங்அவுட்ஸ், கூகுள் டொமைன்ஸ் மற்றும் ஸ்டேடியா போன்ற சேவைகளுடன், கூகுள் அசிஸ்டன்ட் சேவையும், கூகுளின் நிறுத்தப்பட்ட தயாரிப்புகள் பட்டியலில் இணைய உள்ளது.