அறிந்து கொள்ளுங்கள்

இனி AI, ஜென் Z இல்லாம இந்திய வர்த்தகமே கிடையாது - அடித்துக் கூறும் கூகுள் ஆய்வு

2030-ல் ஆன்லைன் வர்த்தகத்தில் செலவிடப்படும் மொத்தத் தொகையில் 45 சதவீதத்தை 'ஜென்-இசட்' தலைமுறையினரே தீர்மானிப்பார்கள்.

கூகுள் மற்றும் டெலாய்ட் நிறுவனங்கள் இணைந்து ''250 பில்லியன் டாலர் வர்த்தகத்தின் புதிய எல்லை'' என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் மற்றும் விருப்பங்களில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களை விரிவாக விளக்குகிறது.

மேலும் இந்தியாவின் மின்னணு வர்த்தக கட்டமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது 90 பில்லியன் டாலராக, இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.25 லட்சம் கோடியில் உள்ள இந்த துறை, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 250 பில்லியன் டாலர், அதாவது ரூ.23.25லட்சம் கோடி. என்ற இலக்கை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தூண்கள்

இந்த வளர்ச்சியின் முக்கிய சக்தியாக 22 கோடி இளைஞர்களைக் கொண்ட 'ஜென்-இசட்' தலைமுறையினர் இருப்பார்கள்.

2030-ல் ஆன்லைன் வர்த்தகத்தில் செலவிடப்படும் மொத்தத் தொகையில் 45 சதவீதத்தை இந்தத் தலைமுறையினரே தீர்மானிப்பார்கள்.

மேலும், புதிதாக 15 கோடி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் நுழைவார்கள் என்று கூறியுள்ளது.

மேலும் இந்தியாவின் எதிர்கால வர்த்தகம் நான்கு முக்கிய தூண்களின் அடிப்படையில் அமையும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.

முதலாவது தூண், வெறும் விளம்பரங்களாக இல்லாமல், கதைகள் மற்றும் படைப்பாளிகள் மூலம் நுகர்வோரை வாங்கத் தூண்டுவது. இரண்டாவது, அறிவுசார் வழிமுறைகள் ஆகும். ஏஐ தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாகக் கணித்து தீர்வுகளை வழங்குவது.

மூன்றாவது, உடனடித்தன்மை. ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே பொருட்களைக் கையில் சேர்க்கும் 'குவிக் காமர்ஸ்' முறை.

நான்காவது நேரடி அனுபவம். விர்ச்சுவல் ட்ரை-ஆன் போன்ற வசதிகள் மூலம் பொருட்களை டிஜிட்டல் முறையில் அனுபவித்து அறிவது.

புதிய தூதர்கள்

உடனடியாக பொருட்களை விநியோகம் செய்யும் விரைவு வர்த்தகம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வேகமாக பரவும்.

குறிப்பாக அழகுசாதனப் பொருட்கள், ஃபேஷன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் சமூக வலைதளப் படைப்பாளிகள் வர்த்தகத்தின் புதிய தூதர்களாக உருவெடுப்பார்கள். 2030-ல் நடக்கும் மொத்த விற்பனையில் 30 சதவீதத்தை இவர்களே தீர்மானிப்பார்கள்.

ஒரு படைப்பாளியின் 'ஸ்டோர்பிரண்ட்' மூலம் நேரடியாகப் பொருட்களை வாங்கும் வழக்கம் அதிகரிக்கும். இதன் ஒரு பகுதியாக, 'லைவ் காமர்ஸ்' எனும் நேரலை வர்த்தகம் 8 பில்லியன் டாலர் துறையாக வளரும்.

சில்லறை விற்பனையாளர்களுக்கு ஏஐ ஒரு 'ஆற்றல் பெருக்கியாக' செயல்படும். இது வர்த்தகத்தின் லாபத்தை 30 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்க உதவும்.

வாடிக்கையாளரின் தேவையை முன்னரே கணித்து, அவர்களுக்கான தனிப்பட்ட விருப்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்த லாபம் சாத்தியமாகும் என்று கூறப்பட்டுள்ளது.