சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் கணக்குகள் அதிகரித்து வருவதால், உண்மையான மனிதர்களுக்கும் ஏ.ஐ. (AI) கணக்குகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டறிவது கடினமாகி வருகிறது. இதை சமாளிக்க, பேஸ்புக் நிறுவனம் "பேஸ்புக் வெரிஃபைடு" (Facebook Verified) என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
செய்திகள், குறுந்தகவல்கள், ப்ரோஃபைல் மற்றும் குறுந்தகவல்களை ஏ.ஐ. மூலம் எளிதாக உருவாக்க முடிவதால், ஒரு ப்ரோஃபைலின் பின்னணியில் உண்மையான நபர் இருப்பதை பயனர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த வசதியை வழங்க விரும்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பேஸ்புக்கின் இலவச சரிபார்ப்பு முறையாகும்; இதில் பயனர்களின் 'வீடியோ செல்ஃபி' பெறப்பட்டு, அது ஏற்கனவே உள்ள சுயவிவர புகைப்படங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகிறது. இந்த செயல்முறைக்கு சில நிமிடங்களே ஆகும். சரிபார்ப்பு முடிந்ததும், பயனருக்கு ஒரு 'பேட்ஜ்' அல்லது 'டிக் மார்க்' வழங்கப்படும்; இது அவர்களின் சுயவிவர பக்கத்தில் காட்டப்படும்.
பேஸ்புக் டேட்டிங், மார்க்கெட்பிளேஸ், க்ரூப்ஸ் மற்றும் ப்ரோஃபைல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த குறியீடு பயன்படுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது.
சரிபார்ப்பு செயல்முறையில் தேர்ச்சி பெற, ஒரு கணக்கு மெட்டாவின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள ஃபேஸ்புக் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
மெட்டாவின் தகவலின்படி, "பேஸ்புக் வெரிஃபைடு" வசதி முதலில் குறிப்பிட்ட சில சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இது குறித்து மெட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேஸ்புக் வெரிஃபைடு பேட்ஜ் என்பது, ஒரு ப்ரோபைல் உண்மையான நபருக்கு சொந்தமானது என்பதை குறிக்கிறது — அதாவது, அவர் செல்ஃபி சரிபார்ப்பை முடித்து, எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு சந்திப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்போ, அல்லது ஒரு உரையாடலில் சேர்வதற்கு முன்போ, மறுமுனையில் ஒரு உண்மையான நபர் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தும் ஒரு விரைவான, வெளிப்படையான சமிக்ஞை இது," என தெரிவித்துள்ளது.