அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL), இந்த ஆண்டு 5ஜி மொபைல் சேவைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது; இதற்கான காலக்கெடுவாக டிசம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல்.-இன் கேரள பிரிவு தலைமை பொது மேலாளர் (CGM) சாஜி குமார் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, நிறுவனத்தின் தற்போதைய 4ஜி கட்டமைப்பு ஏற்கனவே "5ஜி-க்கு தயாராக" (5G-ready) இருப்பதால், அடுத்த தலைமுறை சேவைக்கு எளிதாக மாற முடியும் என்று தெரிவித்தார்.
"5ஜி-க்கு மாறுவதற்கு மென்பொருள் மேம்படுத்தல்கள் மட்டுமே தேவைப்படும். உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட எங்கள் 5ஜி நெட்வொர்க்கின் சோதனையை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இருப்பினும், அடுத்த தலைமுறைக்கு மேம்படுத்துவதற்கு முன், எங்களின் தற்போதைய 4ஜி நெட்வொர்க் முதலில் நிலைபெற வேண்டும்.
5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடுவாக டிசம்பர் 2026 எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சாஜி குமார் கூறினார்.
86 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை கொண்ட பி.எஸ்.என்.எல்.-இன் கேரளப் பிரிவில், 5ஜி-க்கு எளிதாக மேம்படுத்தக்கூடிய சுமார் 7,200 4ஜி மொபைல் டவர்கள் உள்ளன என்று சாஜி குமார் மேலும் தெரிவித்தார். 4ஜி கட்டமைப்பை வலுப்படுத்த நாடு முழுவதும் நிறுவப்பட்டு வரும் 26,300 புதிய மொபைல் டவர்களாலும் மாநிலம் பயனடையும்.
மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் சேவை வரம்பை மேம்படுத்த, போதிய சேவை இல்லாத இடங்களில் 323 டவர்களையும், லட்சத்தீவில் மேலும் 37 டவர்களையு பி.எஸ்.என்.எல். நிறுவ உள்ளது.
மாநிலத்தில் தனது IMS (IP Multimedia Subsystem) திறனை பி.எஸ்.என்.எல். மேம்படுத்தியுள்ளதாகவும், இது குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான அதிகப்படியான பயன்பாட்டு சுமையைக் கையாள உதவும் என்றும் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார்.
முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்காக பல கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்தது. இவற்றில் 'Re. 1 Freedom 2.0' திட்டம், மாதத்திற்கு ரூ. 1,111 என்ற அறிமுகச் சலுகையுடன் கூடிய 'Fibre Freedom Plan', மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் வேலிடிட்டி ஆகியவை அடங்கும்.