அறிந்து கொள்ளுங்கள்

செப்டம்பர் நிகழ்வுக்கு தேதி குறித்த ஆப்பிள், வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதிய ஐபோன் சீரிஸ் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஒருவழியாக தனது செப்டம்பர் நிகழ்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வுக்கு ஆப்பிள் நிறுவனம் "சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்" என்ற டேக்லைன் கொண்டுள்ளது.

2026 ஆண்டுக்கான ஐபோன் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்போகும் சாதனங்கள் குறித்து ஆப்பிள் எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், ஆப்பிள் இந்த நிகழ்வில் அந்நிறுவனம் புதிய ஐபோன் சீரிஸ் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் நிகழ்வு:

ஆப்பிள் செப்டம்பர் நிகழ்வுகள் குறித்து இணையத்தில் வெளியான அழைப்பிதழ் பதிவுகளில், ஆப்பிள் நிகழ்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், முந்தைய ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டு ஆப்பிள் நிகழ்வும் கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வு:

கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் தொடங்கி ஆப்பிள் தனது ஹார்டுவேர் நிகழ்வுகளை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொளிகளை ஆப்பிள் பார்க் அரங்கில் ஒளிபரப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

இந்த முறை ஆப்பிள் இந்த வழக்கத்தை மாற்றி, மீண்டும் ஆப்பிள் நிர்வாகிகளை வைத்தே சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்வினை ஆன்லைனில் உலக நாடுகளில் மக்கள் நேரலையில் காண முடியும். இந்த நிகழ்வு ஆப்பிள் வலைதளம் மற்றும் அதன் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதேபோல் இந்த நிகழ்வு ஆப்பிள் டிவி செயலியிலும் நேரலை செய்ய்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை மாற்றம்:

முன்னதாக ஆப்பிள் வெளியிட்ட அறிவிப்பின் படி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணை தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் வருகிற செப்டம்பர் 1, 2026-ஆம் ஆண்டில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க இருக்கிறார்.

தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகும் போதிலும், டிம் குக் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக குழுவின் தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.