பாரதி ஏர்டெல் நிறுவனம், தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியை வழங்கி வந்த அனைத்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுத்தியது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிக டேட்டா பயன்பாட்டை கொண்ட, அதிக விலை கொண்ட திட்டங்களையே தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி (app) மூலம் இது தெரியவருகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 299, ரூ. 319, ரூ. 579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளது. இதனால், பிரபலமான ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தியவர்கள் இனி அதிக விலை கொண்ட திட்டங்களையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டயம் ஏற்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதால், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கட்டண உயர்வை நோக்கிய தவிர்க்க முடியாத ஒரு மாற்றத்தை குறிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலில், ஆரம்ப நிலை திட்டங்களான ரூ. 199 மற்றும் ரூ. 219 ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், பிரபலமான ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தியவர்கள், தினமும் அதிக டேட்டா தேவைப்பட்டால் இனி ரூ. 349 திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்; இது அவர்களுக்கு சுமார் 16 சதவீத விலை உயர்வாக அமைகிறது.
ப்ரீபெயிட் திட்டங்கள் நீக்கப்பட்டது குறித்து ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த நடவடிக்கை நிலையான ARPU வளர்ச்சியை நோக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் முயற்சிகளில் ஒரு பகுதி என்று இந்த மாற்றம் குறித்த விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டா அளவை விரைவாக பயன்படுத்திவிட்டு, கூடுதல் டேட்டாவுக்காக 'டாப்-அப்' செய்வதையோ அல்லது மீண்டும் ரீசார்ஜ் செய்வதையோ வழக்கமாக கொண்டிருந்தனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒப்பிட்டு பார்க்கையில், ரூ. 349 திட்டம் அன்லிமிட்டெட் 5G டேட்டா வசதியை வழங்குகிறது.
நிறுத்தப்பட்ட ரூ. 299 திட்டமானது, 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்கியது. அதே சேவைகள் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ. 319 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. ரூ. 579 திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டாவையும், ரூ. 619 திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் அதே போன்ற பலன்களையும், ரூ. 649 திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டாவையும் வழங்கின.