அறிந்து கொள்ளுங்கள்

கூட இருந்தே குழி பறிக்கும் AI சாட் பாட்கள்.. AI-யின் ஏமாற்று வேலைகள் 5 மடங்கு அதிகரிப்பு - ஆய்வில் பகீர்

வினோதமாக, ஒரு ஏஐ தனது வேலையை குறை சொன்னவரை அவமானப்படுத்தி Blogpost ஒன்றை எழுதி தன்னிச்சையாக இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கூகுள்(ஜெமினி), ஓபன்ஏஐ (சாட்ஜிபிடி), எக்ஸ் (குரோக்) மற்றும் ஆந்த்ரோபிக்(கிளாட்) போன்ற முன்னணி நிறுவனங்களின் ஏஐ சாட்போட்கள் சாமானிய மக்களிடமும் புழக்கத்தில் உள்ளன.

வேலையிடம் தொடங்கி தனிப்பட்ட தேவைகள் வரை ஏஐ மயக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் இந்த ஏஐகள் மனிதனை மீறி தன்னிச்சையாக செயல்படத் தொடங்கினால் என்னவாகும் என்ற அச்சம் நிபுணர்கள் முதல் சாமானியர்கள் வரையிலும் இருக்கவே செய்கிறது.

இதை மெய்ப்பிக்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. உதராணமாக ஏஐ தனக்கு இடப்பட்ட கட்டளையை ஏற்காதது, தான் வழங்கிய பதிலை குறை சொல்பவரை திட்டுவது என ஏஐ சற்று அதிகப்ரசங்கி தனமாக செய்து வருகிறது.

இந்த சூழலில் பிரிட்டன் அரசின் நிதி உதவியுடன் இயங்கும் ஏஐ செக்யூரிட்டி இன்ஸ்டிடியூட் (AISI) நடத்திய ஆய்வில் ஏஐகளின் அசாதாரண போக்கு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் ஏஐ சாட்பாட்களை கூர்ந்து கவனித்ததில் அவற்றின் 'ஏமாற்று வேலைகள்' (Scheming) ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 700க்கும் மேற்பட்ட நிஜ உலகச் சம்பவங்களை ஆராய்ந்து ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இந்த பாட்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட நேரடி உத்தரவுகளைப் புறக்கணிப்பதோடு, பாதுகாப்பு வளையங்களையும் மீறிச் செயல்படுவதாக ஆய்வு கூறுகிறது.

மனிதர்களுக்குத் தெரியாமல் மின்னஞ்சல்களை அழிப்பது, கோப்புகளை அகற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.

வினோதமாக, ஒரு ஏஐ தனது வேலையை குறை சொன்னவரை அவமானப்படுத்தி Blogpost ஒன்றை எழுதி தன்னிச்சையாக இணையத்தில் வெளியிட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், தனது பயனரின் அனுமதியின்றி நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைத் தானாகவே குப்பைக்கு மாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போதைக்கு இவை சிறிய தவறுகளாக இருந்தாலும் வரும் காலங்களில் இது ஆபத்தை விளைவிக்கும் அளவிலான பெரிய தவறுகளை மீறல்களை செய்யக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே இணயத்தில் ஏஐகளால் பரப்பப்படும் போலி செய்திகள் மேலும் அச்சறுத்தலாக அமைந்துள்ளது.