தொழில்நுட்பம்

விண்வெளியை படம் பிடிக்கும் மிகச் சிறிய 'MIRA' கேமரா அமைப்பு: ஐதராபாத் நிறுவனத்திற்கு இந்திய காப்புரிமை!

விண்வெளியில் செயற்கைக்கோளின் அதிர்வுகளைத் தாங்கித் துல்லியமான படங்களை வழங்கும் திறன் பெற்றது.

'மீரா' கேமரா அமைப்பு, அக்டோபர் 1 அன்று விண்ணில் ஏவப்படவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘டிரான்ஸ்போர்ட்டர்-18’ மிஷன் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஈஆன் ஸ்பேஸ் லேப்ஸ்’, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள மிகச் சிறிய விண்வெளி தொலைநோக்கி கேமரா அமைப்பான ‘மீரா’ தொழில்நுட்பத்திற்காக இந்திய காப்புரிமையை பெற்றுள்ளது.

இந்த 'மீரா' கேமரா அமைப்பு, அக்டோபர் 1 அன்று விண்ணில் ஏவப்படவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘டிரான்ஸ்போர்ட்டர்-18’ மிஷன் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனமான 'டேக்மி2ஸ்பேஸ்' உருவாக்கியுள்ள, இந்தியாவின் முதல் விண்வெளி கம்ப்யூட்டிங் செயற்கைக்கோளான 'MOI-1A' இல் இந்த மீரா கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மீரா அமைப்பின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இது வெறும் '502 கிராம் எடை' மட்டுமே கொண்டது. ஒரே ஒரு ஃபியூஸ்டு சிலிக்கா படிகத்தில் இருந்து அதிநவீன முறையில் செதுக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளின் அதிர்வுகளைத் தாங்கித் துல்லியமான படங்களை வழங்கும் திறன் பெற்றது. நாசா விண்வெளித் தரநிலைகளுக்கு ஏற்ப முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டுச் சான்றளிக்கப்பட்டுள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் உயர்தர மல்டிஸ்பெக்ட்ரல் படங்களை மிகச் சிறிய அளவில் வழங்கி சாதனை படைக்கிறது.

வணிக ரீதியாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்தப் புதிய தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயக் கண்காணிப்பு, கடல்சார் கண்காணிப்பு, சுரங்கப் பணிகள், விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் காப்பீட்டுத் துறைகளுக்கான வணிகச் சேவைகளில் இது பயன்படும். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் 'iDEX' திட்டத்தின் கீழ், இந்திய ராணுவம் மற்றும் கடற்படைக்கான மிக நீண்ட தூர எலக்ட்ரோ-ஆப்டிகல் அமைப்புகளை உருவாக்க ஈஆன் ஸ்பேஸ் லேப்ஸ் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

ஜனவரி 2026-இல் இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் மிஷனில் மீரா முதன்முதலாக அனுப்பப்பட்டபோது, ராக்கெட்டின் மேல் அடுக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தோல்வியடைந்தது. இருப்பினும், அதன் வன்பொருள் கட்டமைப்பு விண்வெளிப் பயணத்திற்கு உகந்தது என்பது அந்த மிஷனில் நிரூபணமானது. தற்போது ஸ்பேஸ்எக்ஸ் மூலம் ஏவப்படுவதுடன், நடப்பாண்டின் பிற்பகுதியில் இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுகணையான SSLV மூலமாகவும் மற்றொரு மீரா கேமராவை விண்ணில் செலுத்த நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து ஒளியியல் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டிலேயே தயாரிக்கும் 'மேக் இன் இந்தியா' முயற்சியை வலுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என ஈஆன் ஸ்பேஸ் லேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான சஞ்சய் குமார் மற்றும் புனித் படேகா தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT